அன்னிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதியின் கேள்விக்கு பதில் அளிக்க சசிகலாவை 13 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த பெங்களூர் சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியி்ல் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெ ஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் கடந்த 1996-ல் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சசிகலா, பாஸ்கரன் இரண்டு பேரும் தொடர்புடையதாக 3 வழக்குகளும், தனித் தனியாக 2 வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகள் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
இவற்றில், 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக, காணொலி காட்சி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யபட்டது.
இதனையடுத்து அமலாக்கத்துறையின் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து அந்த சாட்சிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகளை கேட்டு பதிலை பதிவு செய்வார்.
இந்த நடைமுறைக்காக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை வரும் 13 ஆம் தேதி (மே 13) நேரில் ஆஜர்படுத்த சிறை நிர்வாகத்திற்கு எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.