அதிமுகவில் உட்கட்சி குழப்பம் நீடித்து வருகிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் என மாறி மாறி சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். இதனால் அதிமுகவில் நிலையற்ற சூழல் நிலவுகிறது. ஓ.பன்னீர் செல்வம் அனைவரும் ஒற்றிணைந்து அதிமுகவில் செயல்படலாம் எனக் கூறி வருகிறார்.
சசிகலா, டிடிவி தினகரன் என அனைவரும் ஒற்றிணைந்து கட்சியில் செயல்பட வேண்டும் எனக் கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதற்கு செவிசாய்க்க வில்லை. எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஒற்றிணைந்து செயல்படலாம் என்ற ஓபிஎஸ் அழைப்பிற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்திருந்தார். சசிகலா தரப்பிலிருந்து எவ்வித பதிலும் இல்லை. சசிகலா தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், சேலம், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று (செப்.12) சேலத்தில் சுற்றுப்பயணத்தை சசிகலா தொடங்குகிறார்.
இந்தநிலையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள் ஆத்தூர் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி மறஅறும், ஆத்தூர் நகர செயலாளர் ராமசாமி ஆகியோர் ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரனிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், ஆத்துார், தலைவாசல், நரசிங்கபுரம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு சசிகலா மாலை அணிவிக்க அனுமதிக்கக் கூடாது. மீறி மாலை அணிவிக்க வந்தால் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம். ஆத்தூர் தொகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த சசிகலா முயற்சி செய்வதாக குற்றச்சாட்டியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்வது அதிமுக வட்டாரத்தில், குறிப்பாக இபிஎஸ் அணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil