மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜுன் 4) எண்ணப்பட்டன. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணி 40தொகுகளையும் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இதில், முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கிட்டதிட்ட 5.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் முதல் நாடாளுமன்ற தொகுதியான திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் 20,85,991 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த தேர்தலில் 14,30,738 பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் உள்பட மொத்தம் 14 பேர் களத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், சசிகாந்த் செந்தில் பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதியை விட 5 லட்சத்து 72 ஆயிரத்து 155 வாக்குகள் ( 5,72,155 ) அதிகம் பெற்று பெற்றார்.
சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதையடுத்து இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க, தே.மு.தி.க உள்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
இவருக்கு அடுத்தபடியாக தி.மு.கவின் டி.ஆர்.பாலு தமிழகத்தில் 2-வது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட டி.ஆர்.பாலு, அதிமுக வேட்பாளர் பிரேம் குமாரை விட 4.80 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கவனம் பெற்றார். சச்சிதானந்தம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் நெல்லை முபாரக்கை விட 4,43,821 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அடுத்ததாக, தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி, 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதற்கு அடுத்தபடியாக பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு, 3,85,508 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் விட 2.25 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தமிழச்சி தங்கபாண்டியன் மொத்தம் 5,16,628 வாக்குகள் பெற்றார். தமிழிசை சௌந்தரராஜன் 2,90.683 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“