சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல்நிலைய சித்திரவதையில் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை, சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கப்பட்டதில், கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர்.
தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2020-ல் இவர்களுக்கு எதிராக சி.பி.ஐ மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “போலீசார் தாக்கியதால் எனது கணவர், மகன் உயிரிழந்தனர். கொலை வழக்கு தாமதமாக பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டோர் தற்போது சிறையில் உள்ளனர். ஆனால், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்குமாறு உத்தரவிடவேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, மதுரை நீதிமன்றத்தில் நடக்கும் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணையை, 3 மாதத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“