சூரிய பகவானை போற்றும் வகையில் நான்கு நாள் கொண்டாட்டமான சத் பூஜையைக் கொண்டாடுவதற்காக ஏராளமான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர்.
இந்த சத் பூஜை இது பீகார் , கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் நேபாள பகுதி மக்களால் நீண்ட காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தண்ணீர், உணவை தவிர்த்து பெண்கள் கடும் விரதம் இருந்து, நீர்நிலைகளுக்கு சென்று உதயமான மற்றும் மறையும் சூரியனுக்கு பிரசாதம் வழங்குவது இந்த பூஜையின் முக்கிய நோக்கமாகும்.
சத் பூஜை வடமாநிலங்களில் கோலகலமாக கொண்டாடப்படும் நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு பீகார், ஜார்கண்ட், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் வட இந்திய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த சத் பூஜையை கொண்டாடுவது வழக்கம். அதேபோலவே சூரிய உதயத்திற்கு முன் சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட ஏராளமான வடஇந்தியர்கள் சூரியனை வணங்கி தீபம் ஏற்றி, பழம், கரும்பு போன்றவற்றை படையலிட்டனர்.
இந்த பூஜையின் போது குப்பைகள் சேர்வதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவில் கடற்கரை சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக GCC அதிகாரிகள் கூடுதல் குப்பை தொட்டிகளை வைத்திருந்தனர்.
இந்த 4 நாள் சத் பூஜையானது நவம்பர் 5 ஆம் தேதி 'நஹய்-காய்' சடங்குடன் தொடங்கிய நிலையில் இன்று நிறைவடைந்தது. கார்த்திக் சுக்லாவின் ஆறாம் நாளிலும், தீபாவளிக்குப் பிறகு ஆறு நாட்களிலும் இந்த சாத் அனுசரிக்கப்படுகிறது .
இந்த சத் பூஜையானது வட இந்தியர்களுக்கு பொங்கல் திருவிழா போன்றதாகவும் இந்த நாளில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நீர்நிலைகளுக்கு சென்று விளக்கேற்றி, கரும்பு, மஞ்சள் வைத்து படையலிட்டு சூரியபகவானுக்கு நன்றி செலுத்தி வணங்கி செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“