சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று ( ஜூலை 8ம் தேதி) மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisment
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் தாக்கியத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றி, சம்பந்தப்பட்ட 5 போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் அனைவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு 14 காவலர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அனைவரிடமும் நடத்தப்பட்ட விசாரணை இன்று மாலை 7 மணிக்கு முடிவுக்கு வந்தது.
விசாரணையின் முடிவில் காவல் உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது கொலை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட அதே வழக்குகள், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 பேர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரும் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil