Arun Janardhanan
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசாரால் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், இதுபோன்ற மேலும் பல சம்பவங்கள் இங்கு நடைபெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதி விசாரணை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. ஜெயராஜ் – பென்னிக்ஸ் தாக்குதல் சம்பவம் நிகழ்வதற்கு சிலநாட்களுக்கு முன்னர், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 28 வயதான வாலிபர் ஒருவர், போலீஸ் விசாரணையில் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளத்தை அடுத்து உள்ள ஆறுமுகநேரி காவல்நிலையத்தில், 33 வயதான ஆட்டோ டிரைவர், போலீஸ் தாக்குதலில், டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு சென்றுள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
சாத்தான்குளம் லாக்கப் மரணத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன், கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தென்மண்டல ஐ.ஜி.யாக முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை துவங்குவதற்கு முன்பாக குற்றவாளிகள் ஆதாரத்தை அழித்துவிடும் வாய்ப்பு இருப்பதால், உயர்நீதிமன்ற மதுரை கிளை, இவ்விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையை உடனடியாக துவக்க உத்தரவிட்டது. இதனையடுத்து, திருநெல்வேலி சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் தலைமையிலான சிபிசிஐடி குழு, விசாரணையை துவக்கியுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பலர், இத்தகைய போலீஸ் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் புட்டம் உள்ளிட்ட உடலின் பின்பகுதிகளிலேயே போலீசார் கொடூர ஆயுதங்களால்,தாக்குதல் நடத்தியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவத்துறையின் தடயவியல் துறையில் இடம்பெற்றுள்ளவர் கூறிய தகவலின்படி, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசாரின் கொடூர தாக்குதலுக்கு ஆளான பலர், இன்னும் சிகிச்சை பெறாமலேயே உள்ளனர். முத்துக்குமார் என்ற வாலிபரை போலீசார், லத்தி , கூர்மையான ஆயுதங்கள் உள்ளிட்டவைகளை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். அவருக்கு இரண்டுவாரகாலம் ஆகியும் சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தது.
இதேபோல், ராஜாசிங் என்பவரும், சாத்தான்குளம் காவல்நிலையத்தில், போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தார். நீதிவிசாரணையில் இந்த தகவல் தெரியவரவே, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரிலேயே அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதத்தில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி மகேந்திரன் என்பவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் குறித்து யாராவது வாய் திறந்தால், மகேந்திரனை போல, துரையையும் கொன்று விடுவோம் என்று கூறி, போலீசார், மே 23ம் தேதி துரையை கைது செய்திருந்தனர். மகேந்திரன் மரணத்தில் தற்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சப் இன்ஸ்பெக்டர் ரகுகணேஷிற்கும் தொடர்பு இருப்பதாக மகேந்திரனின் தாயார் புகார் அளித்துள்ளதாக நீதிவிசாரணை நீதிபதி, தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையின்போது போலீசார் தன்னை கடுமையாக தாக்கியதாக மகேந்திரன், தனது தாயாரிடம் தெரிவித்திருந்தார். மகேந்திரனின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அவரது வலது கை மற்றும் கால் செயலிழந்து விட்டிருந்தன. ஜூன் 13ம் தேதி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், சிகிச்சைபலனின்றி மகேந்திரன் மரணமடைந்து விட்டதாக தாயார் வடிவு தெரிவித்துள்ளார்.
மகேந்திரன் மரணம் குறித்து வாய் திறக்கக்கூடாது என்று போலீசார் எச்சரித்தது மட்டுமல்லாமல், அவரது சகோதரர் துரையையும் விசாரணைக்கு அழைத்து சென்றுவிட்டனர். மகேந்திரனின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரித்ததால், அவரது உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யாமலேயே புதைத்தோம் என்று வடிவு தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஹபீப் முகமது என்ற 33 வயதான ஆட்டோ டிரைவர், ஆட்டோ ஓட்டியபோது, முககவசம் அணியவில்லை மற்றும் புகைபிடித்துக்கொண்டே வாகனம் ஓட்டினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஆறுமுகநேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆறுமுகநேரி காவல்நிலையத்தில், பெண் போலீசாரால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானார்.
நீதிவிசாரணை குழுவிடம் அளித்த புகாரில் ஹபீப் முகமது குறிப்பிட்டுள்ளதாவது, நான் போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போது அங்கு 2 பெண் கான்ஸ்டபிள்கள் இருந்தனர். பின் 4 கான்ஸ்டபிள்கள் மேலும் சேர்ந்துகொண்டனர். அவற்றில் ஒரு பெண் கான்ஸ்டபிள், என் முகத்தில் உதைத்தார். அவர்களின் கைகளில் பிளாஸ்டிக் பைப்புகள் இருந்தன. அவற்றைக்கொண்டு என்னை கடுமையாக தாக்கினர். என்னை அவர்கள் குதிக்க சொல்லினர். அப்படி நான் செய்யும்போது என் தொடையில் பயங்கரமாக தாக்கினர். இரண்டுமணிநேரத்திற்கும் மேலாக இந்த தாக்குதல் சம்பவம் தொடர்ந்தது.
அவர்கள் தாக்கியதில் வயிற்றுப்பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுநீரில் ரத்தம் வரவே, தனியார் மருத்துவமனை நிர்வாகம், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தது. அதன்படி, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கிளம்பிய நிலையில், அங்கு வந்த ஆறுமுகநேரி சப் இன்ஸ்பெக்டர், ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி, என்னை அதிலிருந்து இறக்கி, வீட்டுக்கு செல்ல வலியுறுத்தினார்.
வீட்டுக்கு சென்ற சில மணிநேரங்களில், என் உடல்நிலை மீண்டும் மோசமானதை தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் 12ம் தேதி திருநெல்வேலியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவனைக்கு மாற்றப்பட்டார். 18ம் தேதி அங்கு அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. என் உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து, ஒருநாள் விட்டு ஒருநாள் தற்போது டயாலிசிஸ் செய்துகொள்வதாக ஹபீப், தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தான் மருத்துவமனையில் இருந்தபோது அங்குவந்த போலீசார், புகார் தர சம்மதிக்கவில்லை. பின் நீதிவிசாரணைக்குழுவின் உதவியாலேயே தனது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹபீப் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், தென்மண்டல ஜ.ஜி.ஆக நியமிக்கப்பட்டுள்ள முருகன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.. 2018ம் ஆண்டு நடைபெற்ற குட்கா மோசடி தொடர்பாக ஜெயக்குமாரிடம் விசாரணை நடைபெற்றிருந்தது. சக பெண் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, தென்மண்டல ஐ.ஜி. முருகன் மீது புகார் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil