சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நிகழ்ந்த போலிஸ் தாக்குதலில் ஜெயராஜ் - பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம்,தேசிய அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் போலிஸ் நண்பர்கள் குழுவும் சம்பந்தப்பட்டிப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த அமைப்பை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத்துவங்கியுள்ளன.
தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தற்போது சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு, இந்த போலீஸ் நண்பர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்தது தெரியவந்துள்ளது.
தி சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு இதுதொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரி அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம் மற்றும் இதற்குமுன் நடந்த தாக்குதல்கள் உள்ளிட்டவைகளில், போலீஸ் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த 6 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
சாத்தான்குளம் தந்தை -மகன் உயிரிழந்த விவகாரத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த காவல்நிலையத்தில் உள்ள அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தற்போது சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் மாநில அரசின் பரிந்துரைப்படி சிபிஐ விசாரணை துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போலீஸ் நண்பர்கள் அமைப்பு, 1993ம் ஆண்டு ராமாநாதபுரம் மாவட்டத்தில், போலீசாருக்கும் - பொதுமக்களுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. தற்போதைய நிலையில், மாநிலமெங்கும் 4 ஆயிரம் போலீஸ் நண்பர்கள், போலீசாருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
போலீஸ் நண்பர்கள் அமைப்பில் சேர்பவர்கள் அரசியல் பின்புலமோ, குற்றப்பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.அவர்களுக்கு சம்பளம் கிடையாது என்பதால், இது சேவை அடிப்படையிலான பணி ஆகும்.
தமிழக போலீஸ் துறையில், இந்த போலீஸ் நண்பர்கள் குழு, புற்றுநோய் போன்று ஊடுருவி உள்ளதை, போலீஸ் உயரதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளனர்.
கிராமங்கள் மற்றும் சிறுநகரப்பகுதிகளில், இந்த போலீஸ் நண்பர்கள் குழு, உணவு, டீ வாங்கிவரவும், வாகன சோதனை, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஸ்டேசனுக்கு கொண்டு வர, சட்டவிரோத காரியங்களுக்கு ஆட்களை கைது செய்ய உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.
தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அவ்வப்போது நிலவும் ஜாதி மோதல்களின்போது, இந்த போலீஸ் நண்பர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக போலீஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் நிலையில், ஊரக காவல்படை உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு மக்கள்நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வரும்நிலையில், இந்த போலீஸ் நண்பர்கள் குழு மட்டும் தற்போது குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
2008ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், போலீஸ் நண்பர்கள் என்பது அதிகாரப்பூர்வ அமைப்பு அல்ல. பலர் இதனை தவறாக உருவாக்கி தங்களது சுயலாபத்திற்காகவும், தங்களது எதிரிகளை பழிவாங்கும்நோக்கத்தோடும் இந்த அமைப்பில் செயல்பட்டு தெரிவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த போலீஸ் நண்பர்கள் அமைப்பு விவகாரத்தில், போலீஸ் ஆணையத்தில் இதுதொடர்பான கொள்கைகள் வரையறுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நீதிபதி சந்துரு வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.