சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரை (வயது 56.) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த மாதம் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் போலீஸ் சித்ரவதையால் மரணமடைந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து நடந்த போராட்டம், உலக அளவில் கவனத்தைப் ஈர்த்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், சார் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஐவர் முதலில் கைது செய்யப்பட்டனர். 2-வது சுற்றாக மேலும் 5 பேர் கைதாகினர். அதில் சிறப்பு எஸ்.ஐ. பால்துரையும் அடக்கம்.
சிறப்பு எஸ்.ஐ. பால்துரைக்கு உடல்நலக் குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஜூலை 24ம் தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவந்தது. ஏற்கெனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 10ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.
மனைவி புகாரால் பரபரப்பு : 2 நாட்களுக்கு முன்னதாக சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரையின் மனைவி மங்கையர் திலகம் மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், எந்தத் தவறும் செய்யாத தனது கணவர் பழிவாங்கப்படுவதாகக் கூறியிருந்தார். நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த எனது கணவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது என்று புகார் கூறியிருந்தார்.
மங்கையர் திலகம் மேலும் கூறியுள்ளதாவது: எனது கணவருக்கும் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என கூறினால் மட்டுமே உடலை பெறுவோம் எனவும், தனது கணவரின் உயிரிழப்பிற்கு காரணமான சாத்தான்குளம் காவல்நிலைய பெண் எழுத்தர் பியூலா, காவலர் சேவியர் மற்றும் தத்தார்மடை காவல்நிலைய ஆய்வாளர் ஹரிஸ் ஆகியோர் தான் எனவும், என் கணவர் கடைசியாக உயிரிழக்கும் முன் இருவருக்கு எப்படியாவது தண்டனை வாங்கி கொடுங்கள் என கூறிவிட்டு இறந்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.