Advertisment

சாத்தான்குளம் மரணங்கள் : சி.பி.ஐ விசாரணைக்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் - பி.யூ.சி.ல்

சி.பி.சி.ஐ.டி போன்று முறையான கட்டமைப்பு மற்றும் ஆள்பலம் இல்லை சி.பி.ஐயில் இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சாத்தான்குளம் மரணங்கள் : சி.பி.ஐ விசாரணைக்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் - பி.யூ.சி.ல்

Sathankulam custodial deaths : சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை மரணம் தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காலத்தில் கூறப்பட்ட நேரத்திற்கு பிறகு கடையை திறந்து வைத்திருந்த காரணத்தால் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் காவல்துறையினரால் ஜூன் மாதம் 19ம் தேதி கைது செய்யப்பட்டனர். காவல்துறை விசாரணை என்ற பெயரில் அவிழ்த்துவிட்ட வன்முறைகளால் பெனிக்ஸ் 22ம் தேதி இரவும் ஜெயராஜ் 23ம் தேதி காலையிலும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மரணம் அடைந்தனர். இதனை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து இந்த மரணத்தை வழக்காக எடுத்து விசாரணை செய்தது.

Advertisment

மேலும் படிக்க : அப்பாவி மக்களுக்கு எதிராக அதிநவீன ஆயுதங்களுடன் நிற்கிறது காவல்துறை – லாக்கப் சந்திரகுமார்

குற்றவியல் நீதிமன்ற நடுவர் பாரதிதாசனை அனுப்பி சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்து ஆதாரங்களை பெற்றது நீதிமன்றம். இதில் மிக முக்கியமான சாட்சியாக அந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய ரேவதியின் வாக்குமூலம் பெறப்பட்டது. சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது. இதுவரையில் 10 காவலர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று (10/07/2020) முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது பி.யூ.சி.எல். அமைப்பு.  விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சிபிஐ குழு இவ்வழக்கினை விசாராணை செய்து வருகிறது.

மக்கள் உரிமைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் இந்த அமைப்பு தங்களின் கடிதத்தில் ”சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் காவல் மரணங்கள் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்ற எண்கள் 649/2020 மற்றும் 650/2020, சட்ட பிரிவு 176 1 (1A) கு.ந.ச வழக்குகளை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றியுள்ள அரசாணை (G.O. (2D) NO 150, Home (Police VIII) Department, dated 29.6.2020)யைத் திரும்பப்பெற்று, மீண்டும் சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடர்ந்து நடக்க உத்திரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

அரசாணையை திரும்பிப் பெற வேண்டும்

இது தொடர்பாக அந்த அமைப்பின் உறுப்பினர் மற்றும்  எழுத்தாளருமான பாலமுருகனை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டது. நம்மிடம் பேசிய அவர் “காவல்துறை மரணங்கள் தொடர்பாக இதுவரை நடைபெற்ற விசாரணைகளில் கைது நடவடிக்கையே மிகவும் அரிதானது. சி.பி.சி.ஐ.டி தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு காவலர்களை கைது செய்து வருகிறது. அவர்கள் அப்படியே தொடர்ந்து தங்களின் பணியை செய்தால் நிச்சயம் இவர்களின் மரணங்களுக்கு நீதி கிடைக்கும்” என்று குறிப்பிட்டார்.

மக்கள் மத்தியில் நமக்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வினை பரவலால் இது போன்ற குற்றங்கள் குறையுமா?

நம் அனைவருக்கும் ஓரளவுக்கு நம்முடைய உரிமைகள் என்னவென்று நன்றாகவே தெரியும். ஆனால் அந்த உரிமைகளை நாம் அறிந்து வைத்திருப்பதால் மக்கள் மீது காவல்துறை வைத்திருக்கும் பார்வையும், உனக்கு மேலானவன் நான் என்ற நினைப்பையும் மாற்ற இயலுமா என்றால் அது நிச்சயமாக இயலாது. எங்கெல்லாம் போராட்டங்கள் நடைபெறுகிறதோ, மனித உரிமைகளுக்கான குரல்கள் எழுகிறதோ அதனை ஒடுக்கும் ஒரு ஆயுதமாகவே காவல்துறையினர் பயன்படுத்தப்படுகின்றனர். அரசாங்கத்தின் இந்த போக்கினை சீர் செய்யாமல் காவல்துறையினரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றங்கள் மட்டுமே நீடிக்கும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க : என்கவுண்டர்கள் கொண்டாடப்படும் வரை சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் நிகழும்- திலகவதி ஐ.பி.எஸ்

மன அழுத்தம் என்பதை காரணமாக வைக்க இயலாது - பாலமுருகன்

தமிழகத்தில் எங்கும் பதட்டமான சூழலும் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை எழலாம் என்ற வகையிலும் இடங்கள் இல்லை.  காஷ்மீர் போன்ற பகுதிகளில் தான் எப்போது பிரச்சனை எழுமோ என்ற சூழல் நிகழும். கலவரங்கள், கலகங்கள் நடைபெறும், சரியான நேரத்தில் உணவு கிடைக்காது. போதுமான தூக்கம் இருக்காது. அங்கு தான் மன அழுத்தம் என்பது அதிகமாக இருக்கும். ஆனால் இங்கு அப்படியான  சூழல் ஏதும் நிலவவில்லையே. பின்பு ஏன் மன அழுத்தத்தை காரணமாக வைக்கிறார்கள் என்பது புரியவில்லை.

கொரோனா சூழலில் காவல்துறையின் செயல்பாடு

கொரோனா காலத்தில் ஒவ்வொருவரின் உயிரும் முக்கியமானது தான். ஆனால்  இது நாள் வரை வன்முறைகளை ஒடுக்கும் சூழலுக்குள் இருந்தே பழகிய காவல்துறையை பெருந்தொற்று காலத்தில் மக்களை கண்காணிக்கும் பணிக்கு அமர்த்தியுள்ளது அரசு. சட்ட ஒழுங்கை காப்பவர்கள் எப்படி பெருந்தொற்று காலத்தில் செயல்படுவார்கள்? ஒரு குழுவை கலைக்கும் முயற்சியில் ஈடுபடும் அதே மனப்பான்மையுடன் தான் புலம் பெயர் தொழிலாளர்களை அடிப்பதையும், முகக்கவசங்கள் அணியாதவர்களை அடிப்பதையும் அவர்கள் செய்து வருகிறார்கள். இது போன்ற சூழலில் சுகாதர அலுவலர்கள், பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி உறுப்பினர்களை தான் முன்னிறுத்தியிருக்க வேண்டுமே தவிர காவல்துறையினரை இப்பணிக்கு அமர்த்தியிருப்பதால் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுகிறது என்று கூறுகிறார்.

சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்ட போது, நாம் தொடர்ந்து இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் தர வேண்டும். இல்லையென்றால் இதுவரை செய்யப்பட்டிருக்கும் விசாரணையையே அது ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என்று கூறுகிறார் சோளகர் தொட்டி எழுத்தாளர்.

காவலர்களை கொண்டாடும் நிலையில் இருந்து மாற வேண்டும் மக்கள்

காவலர்கள் கடவுள் கிடையாது. ஏதாவது நன்மை நடக்காதா என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் மக்களுக்கு இது உடனடி நீதியாக கண்களில் படுகிறது. குறிப்பாக என்கவுண்டர் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை மக்கள் கொண்டாடுகிறார்கள்.  மக்களுக்கு கதாநயகர்கள் தேவையில்லை. தெலுங்கானாவில் மருத்துவர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி கொல்லப்பட்ட சூழலில், சம்பவம் நடைபெற்ற அதே இடத்திற்கு சென்று காவல்துறையினர் என்கவுண்டர்கள் நடத்தியுள்ளனர். இதனை மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் நீதித்துறை தானாக முன்வந்து நான்கு பேரின் மரணம் குறித்தும் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அது தன்னுடைய கடமையை சரியாக செய்யவில்லை என்றும் கூறினார் பாலமுருகன்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

பி.யு.சி.எல் கடிதத்தின் முக்கிய அம்சம்

முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில்  ”தற்போது வழக்கின் விசாரணை முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றுவது வழக்கின் விசாரணையை பாதிக்கும் என்றே பொதுமக்கள், கருதுகின்றனர். ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு, ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் என பல வழக்குகளில் சி.பி.ஐயின் செயல்பாடு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.  சி.பி.சி.ஐ.டி போன்று முறையான கட்டமைப்பு மற்றும் ஆள்பலம் இல்லை சி.பி.ஐயில் இல்லை. எனவே விசாரணை விரைவாக நடைபெறுவதில் தொய்வு ஏற்படும். இந்த காலகட்டத்தை பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்களால் சாட்சி மற்றும் சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

”காவல் நிலைய மரணங்கள் தொடர்பான 2 வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி வெளியிடப்பட்ட அரசாணை (G.O. (2D) NO 150, Home (Police VIII) Department, dated 29.6.2020)யைத் திரும்பப்பெற்று, உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில், சி.பி.சி.ஐ.டி காவல்துறையே தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்றும் அக்கடிதத்தில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.

 

Tamil Nadu Saathankulam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment