தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இருவரும் 2 நாட்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நேற்று இருவரும் தீடீரென மரணம் அடைந்தனர். இவர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் போலீசார் அவர்களை சித்ரவதை செய்து கொன்றதாகவும் குற்றம்சாட்டி, சாத்தான்குளத்தில் பொதுமக்கள் நீதிகேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல். பென்னிக்ஸ் இம்மானுவேல்செல்போன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் ஜூன் 19-ம் தேதி கடையடைப்பது தொடர்பாக பென்னிக்ஸ் இம்மானுவேலுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறையினர் காவல்துறையினர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஜூன் 22-ம் தேதி பென்னிக்ஸ் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக போலீசார் அவரை கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பென்னிக்ஸ் தந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்ததாக மருத்துவர்கள் அவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் திடீரென மர்மமான முறையில் இறந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, போலீஸ் காவலில் இருந்த தந்தை, மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர்கள் காவல் நிலையத்தில் சித்ரவதை செய்து அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களுடைய உறவினர்கள், குற்றம் சாட்டினர். மேலும், தந்தை, மகன் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவில்பட்டி மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தந்தை, மகன் லாக்அப்பில் மர்ம மரணம் அடைந்ததற்கு நீதி கேட்டு சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு திருச்செந்தூர் - நாகர்கோவில் சாலையில் உறவினர்கள், வியாப்பாரிகள் பொதுமக்கள் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டதால் போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி போலீஸ் எஸ்.பி ஆகியோர் போராட்ட இடத்துக்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊர் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனே அனைவரையும் கைது செய்ய வேண்டும். கொலை வழக்கு பதிவு செய்த பின்பு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். பிரேத பரிசோதனையை 5 டாக்டர்கள் கொண்ட குழு முன்னிலையில் வீடியோ பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் பணிநீக்கம் செய்யவேண்டும். அதன் பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்படும் என வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறையில் இருந்த தந்தை மகன் மரணத்துக்கு காரணமானவர்கள் நடவடிகை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தந்தை மகன் மர்ம மரணம் குறித்து கோவில்பட்டி ஜெ.எம்.1 நீதிபதி பாரதிதாசன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"