சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்துக்கு திமுக ரூ. 25 லட்சம் நிதி உதவி – கனிமொழி நேரில் வழங்கினார்

M.K. Stalin : மனிதத்தன்மையற்ற இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட துணைநின்ற அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நீதிக்கான போராட்டத்தை ஜனநாயக சக்திகள் அனைத்தும் வலிமையுடன் தொடர வேண்டியுள்ள நிலையில், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும் என்ற உறுதியினை அளிக்கிறேன்.

By: Updated: June 26, 2020, 03:55:38 PM

சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கடையை திறந்து வைத்தனர் என்பதற்காக போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு இருவரும் உயிரிழந்திருக்கின்றனர். இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் வர்த்தகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனாவைவிடக் கொடூரமான முறையில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்ஸும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்தப் பெருங்கொடூரம்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையையும் மகனையும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியும், லத்தியை அவர்களின் பின்புறம் வழியே உடலுக்குள் திணித்துக் கொடுமைப்படுத்தியும், வேட்டி – சட்டையெல்லாம் ரத்தத்தில் நனையும் வகையில் சித்திரவதை செய்தும், நெஞ்சுப்பகுதியில் உள்ள முடிகளைப் பிய்த்தெறிந்து மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தப்படுத்தி உயிர் பறிக்கப்பட்டிருப்பதை பென்னிக்ஸின் தாயும் – சகோதரியும் வேதனையோடும் கண்ணீரோடும் சொல்வதைக் கண்டு தமிழகமே பதறுகிறது.
இறந்த இருவரின் உடலில் காயங்கள் நிறைந்திருப்பதை மருத்துவக் குறிப்புகளிலும் உறுதி செய்துள்ள நிலையில், உடல் கூறாய்வு அறிக்கையும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

கனிமொழி நிதியுதவியை நேரில் வழங்கி ஆறுதல்

மனிதத்தன்மையற்ற இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட துணைநின்ற அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நீதிக்கான போராட்டத்தை ஜனநாயக சக்திகள் அனைத்தும் வலிமையுடன் தொடர வேண்டியுள்ள நிலையில், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும் என்ற உறுதியினை அளிக்கிறேன்.

கணவன் – மகன் என அன்பான இரண்டு உயிர்களைப் பறிகொடுத்து, மூன்று பெண் பிள்ளைகளின் கண்ணீருக்குப் பதில் சொல்ல முடியாமல் வேதனைத் தீயில் வெந்துகொண்டிருக்கும் செல்வராணிக்கு திமுகவின் சார்பில் ஆறுதலினைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்தம் குடும்பத்திற்கு, திமுகவின் சார்பில் 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது . இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கனிமொழி நேரில் வழங்கி ஆறுதல் : சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக திமுக தலைவர் அறிவித்தார். சற்றுமுன் அவர்களது சாத்தான்குளம் இல்லத்திற்கே கனிமொழி நேரடியாக சென்று அந்த நிதியை வழங்கினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sathankulam police lockup deaths thoothukudi dead dmk m k stalin financial assistance

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X