மருத்துவரின் திடீர் விடுப்பு நீட்டிப்பு - தீவிரமடையும் சாத்தான்குளம் சந்தேகங்கள்
Sathankulam custodial death : தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை தீவிரமாகி வரும் நிலையில், மருத்துவரின் இந்த விடுப்பு நீட்டிப்பு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில், தந்தை, மகனுக்கு தகுதி சான்று வழங்கிய பெண் மருத்துவர், 4 நாட்கள் விடுப்பில் சென்றிருந்த நிலையில், மேலும் 15 நாள் விடுமுறையில் சென்றிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 19ம் தேதி இரவு போலீசார் கைது செய்தனர். பின்னர், கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு சாத்தான்குளம் காவலர்கள்தான் காரணம் என்றும், இருவரையும் காவலர்கள் அடித்து துன்புறுத்தியதாக அடுக்கடுக்கான குற்றம்சாட்டினர். இதனிடையே, சிசிடிவி காட்சிகளும் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொய்யானவை என்பதை உறுதி செய்தன. இதைத் தொடர்ந்து, சாத்தான்குளம் காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
போலீசார் கூறியபடி இருவரும் உடல்நிலை குறைவால் உயிரிழந்திருந்தால், அவர்களுக்கு மருத்துவ தகுதிச் சான்றை மருத்துவர் ஏன் வழங்கினார் என்ற கேள்வி எழுந்தது.
இதனிடையே, போலீஸ் காவலில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்க்கு மருத்துவ தகுதிச்சான்று வழங்கிய மருத்துவர் வெண்ணிலா 4 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார். இந்த நிலையில், மருத்துவ தகுதிச்சான்று வழங்கிய மருத்துவர் வெண்ணிலா மேலும் 15 நாட்கள் விடுப்பில் சென்றுள்ளதாக சுகாதார துறை இணை இயக்குநர் பொன் இசக்கி தெரிவித்துள்ளார்.
தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை தீவிரமாகி வரும் நிலையில், மருத்துவரின் இந்த விடுப்பு நீட்டிப்பு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil