தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சாத்தனுார் அணையில் இருந்து திறக்கப்பட்ட 1.70 லட்சம் கனஅடி நீர், தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கரையோரத்தில் உள்ள புதுச்சேரி பகுதிகளான இருளஞ்சந்தை, குருவிநத்தம், பாகூர், கொம்மந்தான்மேடு, ஆராய்ச்சிக்குப்பம், சோரியாங்குப்பம் ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மேலும், இப்பகுதியில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் இருந்து தப்பிக்க பலர், வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள் முகாம் மற்றும் அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி - கடலூர் சாலையை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை, போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“