போளூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு முட்டைகளை வைத்துக்கொண்டே ஏன் முட்டை வழங்கவில்லை எனக் கேட்ட மாணவனை சத்துணவு சமையல் ஊழியர் துடைப்பத்தால் அடித்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த சத்துணவு சமையல் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, மாணவனைத் தாக்கிய சமையல் ஊழியர்கள் சத்துணவு சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாள் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சத்துணவு போடும்போது, முட்டைகளை வைத்துக்கொண்டே முட்டை வழங்காதது ஏன் என்று மாணவன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சத்துணவு சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாள் அந்த மாணவனை துடைப்பத்தால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை பள்ளியில் இருந்த மாணவர் ஒருவர் செல் போனில் வீடியோ பதிவு செய்திருக்கிறார்.
சத்துணவு முட்டை கேட்ட மாணவனை சமையலர் மற்றும் உதவியாளர் இருவரும் துடைப்பதால் தாக்கிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன் சமையலர் மற்றும் உதவியாளர், அந்த பள்ளியின் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
இந்நிலையில், அரசு தொடக்கப் பள்ளியில் சத்துணவு முட்டை கேட்ட மாணவனை துடைப்பதால் தாக்கிய சமையல் ஊழியர்கள் லட்சுமி மற்றும் முனியம்மாள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி முத்தழகன் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கத் தவறிய 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்தும் மாவட்டக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, மாணவனைத் துடைப்பத்தால் தாக்கிய சமையல் ஊழியர்கள் சத்துணவு சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாள் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.