க.சண்முகவடிவேல்
Forest Department | Sathuragiri Hills: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் இன்று மாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, பொதுமக்கள், பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் செய்வதற்கும் மலை ஏறுவதற்கும் வனத்துறை அனுமதி வழங்கியது.
இதனை தொடர்ந்து, இன்று காலை 6 மணியில் இருந்து பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியிலிருந்து, மலைக்கோவிலுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். வரும் 23-ம் தேதி (வெள்ளி கிழமை) மாலையில் இருந்து பௌர்ணமி திதி ஆரம்பமாகிறது. 24ம் தேதி (சனி கிழமை) மாலை வரை பௌர்ணமி திதி உள்ளது. அன்று தான், பிரசித்தி பெற்ற மாசி மகம் நட்சத்திர திருநாளாகும்.
மாசி வளர்பிறை பிரதோஷம், மாசி பௌர்ணமி மற்றும் மாசி மகம் உள்ளிட்ட நாட்களில், சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இன்று முதல், வரும் சனி கிழமை வரையில், 4 நாட்களுக்கும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று, வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியுள்ள சுவாமிகளை, திரளான பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“