சென்னையில் தனியார் ஆலை ஊழியர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்ட விவகாரத்தில், வதந்தி பரப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட புகாரில் சாட்டை துரைமுருகன் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தனது கணவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி சாட்டை துரைமுருகன் மனைவி திருச்சி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடுதிகளில் வழங்கப்பட்ட தரமற்ற உணவால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் நிலை குறித்து ஆலை நிர்வாகம் சரியான தகவல் தெரிவிக்கததால், ஆலையில் பணிபுரியும் 1000 க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாகச் சாட்டை துரைமுருகன் தனது ட்விட்டரில் வதந்தி பரப்பும் வகையிலான கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். தனது முதல் ட்வீட்டில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண்கள் 4 பேர் மர்மமான முறையில் மரணம் 57 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்த ட்வீட்டில், "சீன நிறுவனமான Foxconnல் பணிபுரிந்த பெண்களில் 57 பேருக்கு நச்சுத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டதால் வாந்தி மயக்கம். இதுவரை 9 பெண்கள் இறந்துள்ளனர். ஆயிரம் பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட்கள் சர்ச்சையான நிலையில், சாட்டை துரைமுருகனை ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம், பிராட்டியூரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து திருச்சி தில்லைநகர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அவரது மனைவி மாதரசி இரவு திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள உளவுத் துறை அதிகாரியிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் தனது கணவர் (சாட்டை துரைமுருகன்) போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய சாட்டை துரைமுருகனின் வழக்கறிஞர் பிரபு கூறுகையில், "காவல்துறையினர் தன்னை கைது செய்ய வந்திருப்பதாகச் சாட்டை துரைமுருகன் எனக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். முதலில் கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்குச் சென்றதாகத் தெரிவித்தனர்.
இருப்பினும், நாங்கள் சென்று பார்த்த போது அங்கு அவர் அங்கு இல்லை. இதைத்தொடர்ந்து அதே போலீசாரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவரை கே.கே நகர் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தனர். அங்குச் சென்று பார்த்தபோதும், அங்கும் அவர் இல்லை. தொடர்ந்து காவல்துறையினர் எங்களை அங்கும் இங்கும் அலைக்கழித்து வருகின்றனர். எதற்காகக் கைது செய்யப்பட்டார் என்பது கூட எங்களுக்குத் தெரிவிக்காமல் காவல்துறை செயல்படுகிறது.
சாட்டை துரைமுருகன் மீது யார் புகார் கொடுத்தார். எங்கே புகார் கொடுத்தார் என்று எந்த தகவலையும் போலீசார் எங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. காவல்துறையினரும் முறையான தகவல்களை எங்களுக்குத் தெரிவிக்க மறுக்கின்றனர். உடனடியாக காவல்துறை அவரை கண்டறிந்து குடும்பத்துடன் ஒப்படைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil