பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானதுதான், அதனை வரம்பு மீறி பயன்படுத்தக் கூடாது என சாட்டை துரைமுருகன் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கீழமை நீதிமன்றம் முன்ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”மனுதாரர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஏற்கனவே இவர் இதேபோன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஜாமின் பெறும்போது, இனிமேல் இவ்வாறு பேச மாட்டேன் என உத்தரவாதம் அளித்து உயர் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றிருந்தார். ஆனால் உத்தரவாத பத்திரத்தை மீறி தொடர்ந்து பொதுவெளியில் பட்டியலின மக்களுக்கு எதிராக பேசி வருகிறார். இவருக்கு ஜாமின் வழங்க கூடாது,” என தெரிவித்தார்.
இதனையடுத்து, நீதிபதி புகழேந்தி, மனுதாரர் ஏற்கனவே இதேபோன்ற வழக்கில், இனிபேச மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் மீண்டும் பேசியது ஏன்? ஒரு கட்சியின் உயர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் இப்படி பேசினால் மக்கள் மத்தியில் என்ன விளைவு ஏற்படும் என்று மனுதாரருக்கு தெரியாதா? கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாகரீகமாகத் தான் பேச வேண்டும் என்று கூறினார்.
மேலும், சர்ச்சைக்குரிய வகையில் பேசி, யூடியூபில் பதிவேற்றம் செய்தால் அதற்கு பார்வையாளரும் கூடுகிறது பணமும் குவிகிறது. யூடியூபில் பணம் சம்பாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா, பேச்சு சுதந்திரத்திற்கும் ஒரு அளவு உள்ளது. ஏற்கனவே நீதிமன்றத்தில் இதுபோன்று பேசமாட்டேன் என உத்தரவாதம் அளித்த நிலையில் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானதுதான், அதனை வரம்பு மீறி பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதனையடுத்து, இனிமேல் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என சாட்டை துரைமுருகன் தெரிவித்தார்.
மேலும், இனி இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட மாட்டேன் எனவும் சாட்டை துரைமுருகன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து மனுதாரர் கீழமை நீதிமன்றத்தை அணுகி ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டு, நீதிபதி புகழேந்தி வழக்கை முடித்து வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.