Sattai Duraimurugan Tamil News: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில இளைஞர் பாசறை செயலாளராக இருந்தவர் சாட்டை துரைமுருகன். தற்போது யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு கருத்துக்களை பரப்பியதற்காக அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதற்கிடையில், யூடியூபர் சாட்டை துரைமுருகன் நேற்றுமுன்தினம் மூன்று முறை கைது செய்யப்பட்டார். முதலில் திருச்சியில் இளைஞரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார் பின்னர் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, நடிகை குஷ்பு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது இன்னொரு வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு பெயில் கிடைப்பது கடினம் தான் என்று கூறப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகை குஷ்பு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த அவதூறு வழக்கில், சாட்டை துரைமுருகன் இனிமேல் முதல்வருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எதிராக எந்த வித அவதூறு கருத்துக்களையும் பரப்பமாட்டேன் என உறுதிமொழிக் கடிதம் வழங்கிய நிலையில் அவருக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த வழக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை வழங்கிய உயர் நீதிமன்றம் எழுத்துபூர்வமாக துரைமுருகனிடம் இதற்கான உறுதி மொழியை வாங்கியது.
நீதிபதி புகழேந்தி கடும் கண்டனம்
இந்த வழக்கில் சாட்டை துரைமுருகன் ஜாமீன் விதிகளை மீறிவிட்டதாக கூறி போலீஸ் மீண்டும் வழக்கு தொடுத்தது. எனவே அவரின் பெயிலை ரத்து செய்ய வேண்டும் என்று போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவில் சாட்டை துரைமுருகனை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த வாரமே கண்டித்து இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, "நீதிமன்றத்திற்கு வழங்கும் உறுதிமொழி பத்திரம் வெறும் பேப்பர்தான் என்று நினைக்காதீர்கள். கவனமாக இருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் தனது நேரத்தை தாண்டி உழைக்கிறார். உங்களால் பாராட்ட முடியவில்லை என்றாலும் அவதூறாக பேச வேண்டாம்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், "சாட்டை துரைமுருகன் வீடியோவை பார்த்து நான் உத்தரவு போட முடியாது. அவர் வீடியோவில் பேசியதை எழுத்து பூர்வமாக போலீஸ் தாக்கல் செய்திருக்க வேண்டும். நான் உத்தரவிட்டும் இன்னும் எழுத்துபூர்வமாக விவரங்களை தாக்கல் செய்யாதது ஏன்? போதிய அவகாசம் வழங்கியும் போலீஸார் தாக்கல் செய்யவில்லை. மாநில முதல்வரை அவதூறாக விமர்சனம் செய்ததில் இவ்வளவு அலட்சியமா என்றும் கேள்வியெழுப்பி இருந்தார்.
இந்நிலையில், யூடியூபர் சாட்டை துரைமுருகன் பேசியவற்றை போலீசார் தரப்பு எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, சாட்டை துரைமுருகனின் வீடியோக்களை எழுத்துபூர்வமாக படித்த நீதிபதி புகழேந்தி சாட்டை துரைமுருகன் மீது சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார்.
அதில் அவர், "கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?. கருத்து சுதந்திரம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் யூ டியூபில் பேசுவீர்களா?. நீங்கள் பேசியதை கேட்கவே அருவருப்பாக இருக்கிறது. சில வார்த்தைகளை படிக்க கூட முடியவில்லை. இவ்வாறு எப்படி பேசலாம்? உங்களுக்கு நல்ல சிந்தனை கிடையாது. உங்களுக்கு என்று செய்வதற்கு ஆக்கபூர்வமான பணிகள் எதுவும் கிடையாதா?" என்றார்.
மேலும், சாட்டை துரைமுருகனுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த நீதிபதி புகழேந்தி, அவர் மீதான ஜாமீன் மனு ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்து வழக்கை தீர்ப்பிற்காக வழக்கை ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.