/indian-express-tamil/media/media_files/2025/05/18/WSSwkPcqZSPjwV4QR0aH.jpeg)
சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் அருகே வெள்ளாளன் விளையில் உள்ள தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. இதற்காக கோயம்புத்தூரில் இருந்து சைனி கிருபாகரன் உள்ளிட்ட 8 பேர் இன்று காலை ஆம்னி காரில் புறப்பட்டு வந்தனர். காரை மோசஸ் (50) என்பவர் ஓட்டினார்.
மாலை 4 மணியளவில் சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் இடையே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் வலதுபுறம் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் சுதாரித்த காரில் இருந்த சைனி கிருபாகரன், ஜெரின் எஸ்தர் ஆகிய 2 பேர் காரின் கதவை திறந்து வெளியே குதித்து காயமின்றி தப்பினர். இதில், மோசஸ், அவரது மனைவி வசந்தா, அவரது மகன் ஹெர்சோம், ஜெயபால் மகன் ரவி கோயில் பிச்சை, அவரது மனைவி லெட்ரியா கிருபா, ஹெர்சோம் மகனான ஒன்றரை வயது ஸ்டாலின் ஆகியோர் காருடன் கிணற்றுக்குள் விழுந்தனர்.
கார் கிணற்றுக்குள் பாய்ந்ததை பார்த்த கிராம மக்கள் உடனடியாக சாத்தான்குளம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஹெர்சோமை கிராம மக்கள் மீட்டனர். தகவல் அறிந்து சாத்தான்குளம், நாங்குநேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிணறு சுமார் 50 அடி ஆழம் கொண்டது என்பதால், சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக தேடியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் முத்துக்குளிப்போர் வரவழைக்கப்பட்டு தேடும் பணியில் ஆம்னி வேன் சகதியிலிருந்து மீட்கப்பட்டது.
ஆம்னி வேனில் பயணித்த எட்டு பேரில் 3 பேர் வெளியேறிய நிலையில் மற்ற 5 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கிணற்றில் ஆம்னி வேன் பாய்ந்த விபத்தில் 5 பேர் பலியான நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட முதல்வர் மு.க ஸ்டாலின், தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், வேதனை அடைந்ததாகவும் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.