விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் ஏராளமான ஆண்கள், பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அப்பையநாயக்கன்பட்டி என்ற பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஜன.4 திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 4 அறைகள் முற்றிலும் தரைமட்டமாகின. விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களில் 6 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர். மேலும் தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பட்டாசுகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் தீ பற்றிக் கொண்ட நிலையில் ஆலையில் இருந்த பட்டாசுகள் பெரும் சத்தத்துடன் சரமாரியாக வெடித்து நாலாபுறமும் சிதறியதாக கூறப்படுகிறது.
வெடிகள் வெடித்துச் சிதறியதால் நீண்ட நேரமாக சத்தம் கேட்ட நிலையில் பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியை தொடங்கினர்.
தரைமட்டமான கட்டடங்களில் அதிக உஷ்ணம் காணப்படுவதால், இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பதை கண்டறியும் பணிகளிலும் சிக்கல் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெடி விபத்து நிகழ்ந்த போது சம்பந்தப்பட்ட ஆலையில் எத்தனை பேர் பணியில் இருந்தனர் என்பது உறுதியாக தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“