விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 1-ம் தேதி காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. அன்று காலை 8.30 மணி அளவில் தொழிலாளர்கள் மருந்து கலவை செய்யும் அறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில், அருகிலிருந்த 8 அறைகள் இடிந்து தரைமட்டமானது. அந்த நேரத்தில் ஆலையில் சுமார் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விபத்து ஏற்பட்டதும், சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி, உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் அழகுராஜா, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.