2024 மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க அங்கம் வகித்தது. இந்த நிலையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் மக்களவை தொகுதியில் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூரை எதிர்த்து போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பெற்ற வாக்கு 3,82,876 ஆகும். அதேபோல், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் – 3,78,243 வாக்குகள் பெற்றிருந்தார்.
மறுபுறம் பா.ஜ.க. வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமார் 1,64,149 வாக்குகளும், நாம் தமிழர் கௌசிக் 76,122 வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்தத் தேர்தலில் 4573 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் இதில் சூழ்ச்சி நடைபெற்றிருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார். இதற்கு, மாணிக்கம் தாகூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில், “விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக இதுவரை எந்தப் புகார்களும் வரவில்லை. மறுவாக்குப்பதிவு தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடுவதே முறை. ஏனெனில் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரிலே மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும்” என்றார்.
மேலும்,“தேர்தலில் பதிவான வாக்குகள் 45 நாள்களுக்கு பாதுகாப்பாக வைக்கப்படும்” என்பதையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“