தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டார். அவருக்கு பதில் புதிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹு நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி இருந்து வருகிறார். சென்ற வருடம் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரில், முறையான விசாரணையை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ராஜேஷ் லக்கானி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அதன்பின்பு, புதிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்கவும் தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வந்தது. இந்நிலையில், சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய இயக்குநராக இருக்கும் சத்யபிரதா சாஹூ புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 1997 தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர்.
விரைவில் ராஜேஷ் லக்கானிக்கு பதில், சத்யபிரதா சாஹூ தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜேஷ் லக்கானிக்கு மத்திய அரசு சார்பில் புதிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.