மத்திய அரசு- குஜராத் மாநில அரசு இணைந்து நடத்தும் 'சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்' அறிமுக விழா நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று (மார்ச் 19) நடைபெற்றது. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் 'லோகோ' மற்றும் saurashtra.nitt.edu என்ற இணையதள பக்கத்தை அறிமுகம் செய்தார்.
கடந்த முறை 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. அதேபோல் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. ஏப்ரல் 17 முதல் 26-ம் தேதி வரை 10 நாட்கள் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சோம்நாத் கோயில், துவாரகா, ராஜ்கோட், ஒற்றுமை சிலை அமைந்துள்ள ஏக்தா நகர் ஆகிய பகுதியில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மேலும் கலாச்சார நிகழ்ச்சிகளாக மட்டுமல்லாமல் கலை, உணவு, கைவினைஞர்கள், கல்வி, இலக்கியம் மற்றும் விளையாட்டு போன்றவற்றின் மூலம் ஒரு தொடர்பை உருவாக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை கடந்த முறை சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் செய்திருந்தது. குஜராத்தில் நடைபெறும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை இந்த முறை திருச்சி என்.ஐ.டி நிர்வாகம் மேற்கொள்கிறது. அறிமுக
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மன்சுக் மாண்டவியா, "மத்திய அரசு- குஜராத் மாநில அரசு இணைந்து நடத்தும் 'சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாடு அரசு, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். அதில் 3000 நபர்களைத் தேர்ந்தெடுத்து எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக அழைத்துச் செல்லப்படும்" என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை, குஜராத் மாநில நீர்வளத்துறை அமைச்சர் குன்வார்ஜி பவாலியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "#STSangamam குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையே ஒரு பழமையான பிணைப்பைக் கொண்டாடுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டைத் தங்கள் சொந்த ஊர்களாக ஏற்று உள்ளூர் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டனர். தமிழ் மக்களும் அவர்களை இருகரம் கூப்பு வரவேற்றனர். இந்த சங்கமம் ‘ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்’ என்று கொண்டாடுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil