trichy | லால்குடி வட்டம் புறத்தாக்குடியில் சாதிய பாகுபாடு காரணமாக கிறிஸ்தவ ஆலய தேர்பவனி நடத்தப்படாமல் இருப்பதாக அவ்வூரைச்சேர்ந்த சிலர் புதன்கிழமை (நவ.22) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
தமிழக நல கட்சியின் மாநில பொருளாளர் தாஸ் பிரகாஷ், சிறுபான்மை அணி செயலாளர் ஏசுதாஸ் ஆகியோர் கூட்டாக தத்தம் பகுதியில் தேர் திருவிழாவில் சாதியபாகுபாடு பார்க்கப்படுவதாகவும், ஆட்சியர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனக்கோரி திருச்சியில் நேற்று (நவ.22,2023) செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், “திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புறத்தாக்குடி மகிழம்பாடி கிராமத்தில் புனித சவேரியார் பங்கு ஆலயம் உள்ளது.
கும்பகோணம் கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு உள்பட்ட இந்த தேவாலயத்தில் சாதிய பாகுபாடு கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக சென்னையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர், மதுரை உயர்நீதிமன்ற கிளை சாதிய தீண்டாமை பாகுபாடு இல்லாத வகையில் தேர்த்திருவிழாவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இருந்தபோதிலும் மறை மாவட்ட ஆயர் திருவிழாவை நடத்தாமல் தள்ளிப் போட்டு வருகிறார். ஆகவே, நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து தேர் திருவிழாவை நடத்த வேண்டும் எனக்கூறினர்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது ஸ்டீபன் தாஸ், பிரிட்டோ, ஜோஸ்வா மற்றும் பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“