சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய தொடரப்பட்ட வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் 3-வது நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரபல யூடியூபர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பெண் போலீசார், உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாக் பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த 4-ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனியில் கைது செய்த போது அவரது காரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்த தேனி போலீசார் அவர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்ய கடந்த மே 12-ம் தேதி சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
இதன் பின் சவுக்கு சங்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இந்நிலையில், சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி சுவாமிநாதன், சவுக்கு சங்கர் மீதான குண்டர்சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே சமயம் நீதிபதி பாலாஜி, அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கினார்.
இந்நிலையில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், வழக்கு 3-வது நீதிபதியின் விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து சவுக்கு சங்கர் வழக்கில் 3-வது நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று (ஜுன் 4) செய்யப்படுகிறது.
உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு குறித்து தமிழக அரசு நாளைக்குள் (ஜுன் 5) பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“