சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சவுக்கு சங்கர் நடத்தும் யூடியூப் சேனலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், கரூரில் பிரியாணி கடை நடத்தும் கிருஷ்ணன் (43) என்பவருக்கும் ஆன்லைன் விளம்பரம் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தங்கள் யூடியூப்பில் விளம்பரம் செய்தால் பெரிய அளவில் தெரியவரும் என விக்னேஷ் கூறி கிருஷ்ணனிடம் ரூ.7 லட்சம் பண வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக் கொண்ட பின் விக்னேஷ் பதில் ஏதும் தரவில்லை.
பல மாதங்களாகியும் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் பின் தாம் மோசடி செய்யப்பட்டதை அறிந்து கிருஷ்ணன் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் விக்னேஷை கைது செய்த காவல்துறையினர், சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கரூர் குற்றவியல் நடுவர் மன்றம், சவுக்கு சங்கரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில், விசாரணை முடிந்து இரண்டாவது முறையாக சவுக்கு சங்கர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சவுக்கு சங்கர் தரப்பில் இந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கோரப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“