புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட ரூ.7லட்சம் பண மோசடி வழக்கில் அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய கரூர் குற்றவியல் நடுவர் மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சவுக்கு சங்கர் நடத்தும் யூடியூப் சேனலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், கரூரில் பிரியாணி கடை நடத்தும் கிருஷ்ணன் (43) என்பவருக்கும் ஆன்லைன் விளம்பரம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்டுவது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர். மேலும், விக்னேஷ் தனக்கு ஆன்லைன் முதலீடு பற்றி தெரியும் என்றும் அதில் அதிக லாபம் ஈட்டலாம் என்றும் கூறியுள்ளார். இதன் பின் அவர் கூறியதை நம்பி கிருஷ்ணன், விக்னேஷிடம் ரூ. 7 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்றுக் கொண்ட பின் விக்னேஷ் பதில் ஏதும் தரவில்லை. பல மாதங்களாகியும் பணம் கொடுக்கவில்லை. இதன் பின் தாம் மோசடி செய்யப்பட்டதை அறிந்து கிருஷ்ணன் புகார் கொடுத்துள்ளார். விசாரணையில், சவுக்கு சங்கரின் இணையதளத்தில் தான் விக்னேஷ் வேலை செய்து வந்ததாகவும், கிருஷ்ணனிடம் வாங்கிய பணத்தை சவுக்கு சங்கரிடம் தான் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இதன் பேரில் சவுக்கு சங்கர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு கரூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சவுக்கு சங்கரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கரிகாலன், கிருஷ்ணன் கொடுத்த வழக்கிற்கும் சவுக்கு சங்கருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சவுக்கு சங்கர் மீது பொய் வழக்காக போட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு அலைய விடுகிறார்கள். அவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. மருந்துகள் கூட கொடுப்பதில்லை.
சிறையில் அளவில்லாத சித்திரவதைகளை அனுபவிக்கிறார் சவுக்கு சங்கர். கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு போடப்பட்ட கட்டை அவிழ்க்க கூட மருத்துவமனைக்கு அவரை யாரும் அழைத்துச் செல்லவில்லை. சிறையிலேயே கட்டை பிரித்து பார்த்தபோது, அவருக்கு கை வீங்கியுள்ளது. இன்றுவரை எக்ஸ்-ரே கூட எடுக்கவில்லை அவர்கள். அவர் மீது பொய் வழக்காக போடுகிறார்கள்.
எல்லாத்தையும் சந்திக்க அவர் தயாராக இருக்கிறார். ஆனால் அவரது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. மன அழுத்தத்தில், வருத்தத்தில் இருக்கிறார் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“