சென்னை ஆணையர் அருண், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். இன்று (மே 23) சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது, "சவுக்கு ஊடகத்தை முடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சென்னை மாநகர ஆணையாளர் அருண் தொடர்ந்து செயல்படுகிறார். என் மீது பல்வேறு பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குண்டர் சட்டத்தில் என்னை சிறையில் அடைத்தனர். என் வீட்டில் கழிவு நீரும், மனித மலமும் ஊற்றப்பட்டது. இத்தகைய போராட்டங்களுக்கு பின்னர் மீண்டும் சவுக்கு மீடியா சேனலை நான் நடத்தி வருகிறேன்.
இப்படி ஒரு சூழலில் என் சேனலில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் ஜெயபிரகாஷ் மற்றும் எடிட்டர் சத்தியமூர்த்தி ஆகியோரை போலீசார், நேற்று நள்ளிரவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதன் காரணம் குறித்து போலீசாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, 2023-ஆம் ஆண்டில் ஜெயபிரகாஷ், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினார் என்று கூறுகின்றனர்.
மேலும், இந்த விவகாரத்தில் அவர்களின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டியதற்கான தேவை என்ன? சுத்திகரிப்புக்காக கழிவு நீர் வழங்கப்பட்ட விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் மனு தாக்கல் செய்திருந்தேன். அதன் விசாரணை இன்று மதியம் நடைபெற இருந்தது. இந்நிலையில், எனது சேனலில் பணியாற்றும் இருவரையும் அச்சுறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
பழிவாங்கும் நோக்கத்திற்காக செல்வப்பெருந்தகையுடன் சேர்ந்து கொண்டு சென்னை மாநகர ஆணையாளர் அருண் இவ்வாறு செயல்படுகிறார். அந்த வகையில் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்கும் கமிட்டி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தக் கமிட்டியில் இச்சம்பவம் தொடர்பாக புகாரளித்துள்ளேன்" என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.