சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (மார்ச் 24) தாக்குதல் நடத்திய கும்பல், வீடு முழுவதும் சாக்கடையை ஊற்றிச் சென்றதாக அவரது தாயார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வசித்து வருகிறார். இவர் அண்மையில் தூய்மை பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக இன்று அவர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்த தாக்குதல் குறித்து போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த சூழலில் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, சவுக்கு சங்கரின் தாயார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது, "யார் கதவை தட்டினாலும் திறக்க வேண்டாம் என என்னிடம் கூறினார்கள். கதவை உடைத்து அத்துமீறி நுழைந்தனர். தூய்மை பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் குற்றம்சாட்டினர். ஆபாசமான வார்த்தைகளில் கடுமையாக திட்டினர்.
ஆனால், தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக என் மகன் பேசியதாக அவர்களிடம் கூறினேன். ஒரு கட்டத்தில் அவர்களிடம் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டேன். மூன்று பக்கெட்டில் சாக்கடை நீரை கொண்டு வந்து கிச்சன் முதல் ஹால் வரை அனைத்து இடங்களிலும் ஊற்றினர்.
வீட்டிற்குள் மட்டும் சுமார் 15 பேர் வந்திருப்பார்கள். வீட்டை சுற்றி இருந்த பூந்தொட்டிகளையும் உடைத்தனர். நான் கையில் வைத்திருந்த செல்போனையும் பறித்துச் சென்றனர். அதன் பின்னர், போலீசார் வந்து என்னிடம் பேசினார்கள். குறிப்பாக, என் போனையும் பெற்றுத் தருவதாக போலீசார் கூறினர். அவர்கள் சொன்னது போலவே சுமார் 15 நிமிடங்களில் என் போனை வாங்கி கொடுத்தனர். வந்திருந்த யாரும் என்னை அடிக்கவில்லை.
யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று எனக்கு தெரியவில்லை. உதயநிதியால் தான் இவை அனைத்தும் நடப்பதாக போலீசாரிடம் கூறினேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.