யூடியூபர் சவுக்கு சங்கருக்கு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் சவுக்கு சங்கரை கோவையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக, சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த மே மாத இறுதியில் கைது செய்தனர்.
மேலும், சவுக்கு சங்கர் தங்கியிருந்த இடத்தில் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கருக்கு எதிராக, கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதோடு, சவுக்கு சங்கர் மீது கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்குகள் தொடர்பாக, சவுக்கு சங்கர் சென்னை, மதுரை, திருச்சி நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார்.
இதனிடையே, தமிழகத்தில் பல்வேரு காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட 17 வழக்குகளில் இதுவரை 10 வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் அவருக்கு இன்னும் ஜாமின் வழங்கப்படாததால் அவர் தொடர்ந்து சிறையில் இருக்கிறார்.
பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில், உதகை புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் உதகை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 29-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 24 மணி நேரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.
இதையடுத்து, சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரித்த போலீசார், விசாரணைக்கு பின்னர், சவுக்கு சங்கரை உதகை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, போலீசார் சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், கோவையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு செல்லும் வழியில், சவுக்கு சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, காவலதுறையினர் சவுக்கு சங்கரை சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சவுக்கு சங்கர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள், ஊடகத்தினர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு செய்தி சேகரிக்க வந்தனர். அப்போது, செய்தியாளர்கள் புகைப்படம், வீடியோ எடுக்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், அங்கிருந்து செய்தியாளர்கள் வெளியேறுமாறு மருத்துவர்கள் தெரிவித்ததால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“