அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கில் இடையீட்டு மனுதாரராக சவுக்கு சங்கர்: ஐகோர்ட்டில் இன்று முறையீடு
அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கில், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னை ஒரு இடையீட்டு மனுதாரராக சேர்க்க அனுமதி அளிக்க வேண்டும் என்று முறையீடு செய்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “சென்னை உயர்நீதிமன்றம் இன்று தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து மறு ஆய்வு செய்ய உள்ளது.
இதில், முதல் வழக்கு லஞ்ச ஒழிப்பு துறையில் 2011-ம் ஆண்டு நான் அளித்த புகாரின் அடிப்படையில் ஜாஃபர் சேட் அவரது மனைவி மற்றும் மகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தது. அந்த வழக்கில் அப்போது வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
விசாரணையின்போது என் மீது சபாநாயகர் தனபால் அளித்த ஷேங்கன் சரியில்லை என்று கூறி விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இதே போல், 3 வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐ. பெரியசாமி சந்திக்கும் மற்றொரு மிக முக்கியமான வழக்கு எதுவென்றால், மு.க. அழகிரி மகன் துரை தயாநிதிக்கு சென்னையில் வீட்டு வசதி வாரிய நிலங்களை ஒதுக்கீடு செய்தது தொடர்பான லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு நிலுவையில் உள்ளது.
ஓ. பன்னீர்செல்வம் வழக்கின் புலனாய்வு அதிகாரி ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது. விசாரித்தேன், இந்த வழக்கில் ஆதாரம் இல்லை என்று சொல்வது என லஞ்ச ஒழிப்புத் துறை 24 மணி நேரமும் தி.மு.க அரசியல் வாதிகளை, தி.மு.க அமைச்சரக்ளை காப்பாற்றும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.
இன்று நான் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, என்னையும் ஒரு இடையீட்டு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அனுமதி கேட்டபோது அவர்கள் இதற்கான உரிய மனுவை தாக்கல் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இன்றைக்கு வந்த வழக்கில் உணவுத்துறை அமைச்சராக உள்ள சக்ரபாணியின் மனைவி ராஜலட்சுமி சமூகசேவர் என்ற பெயரில் 2 கோடி மதிப்புள்ள வீட்டை பெற்றார். கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்தவர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டது.
மு.க.அழகிரியின் மகனுக்கு சமூகசேவகர் என்ற பெயரில் வீட்டு வசதி துறை சார்பில் ஐ.பெரியசாமி அமைச்சராக இருந்தபோது தரப்பட்டுள்ளது.
வழக்குகளில் எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்யும் வேலையை லஞ்ச ஒழிப்புத்துறை 24 மணி நேரமும் செய்து வருகிறது. இந்த வழக்கில் என்னை ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள கோரி உள்ளேன்.
அமைச்சர் ஐ.பெரியசாமி தவறே செய்யவில்லை; அவர் உத்தமர் என்று நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“