Edappadi K Palaniswami | Savukku Shankar: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீசில், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4 ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா? என நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சமூக ஊடக பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி காவல்துறை கைது செய்துள்ளது. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில், சவுக்கு சங்கர் சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார், இந்நிலையில் கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். எனவே, நீதிபதி ஒருவரை நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் தி.மு.க அரசில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல தி.மு.க-வினர் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.
சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா? என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பத்திரிக்கையாளர்
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) May 7, 2024
திரு. @SavukkuOfficial ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைதுசெய்துள்ளது காவல்துறை. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை…
சிறைத்துறை ஏ.டி.ஜி.பி விளக்கம்
கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டார் என்றும், அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார். இந்த நிலையில், சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை என்றும் சிறையில் எந்த கைதியும் தாக்கப்படுவதில்லை என்றும் தமிழக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி விளக்கமளித்துள்ளார்.
"சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை. அவர் எந்தவொரு காயமும் ஏற்படாமல் நலமுடன் இருக்கிறார். வாகன விபத்தில் ஏற்பட்ட காயம் இருக்கலாம். அது குறித்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் எதிலும் உண்மை இல்லை." என்று தமிழக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.