காவல்துறை அதிகாரிகள் குறித்து, குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4 ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அவர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர்.
இதனையடுத்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அவரது இல்லம் மற்றும் தியாகராய நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் தேனி மாவட்ட பழனிச்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் நேற்று (மே 10) சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 10 மணி நேர சோதனைக்கு பிறகு லேப்டாப், செல்போன், 2 லட்சம் ரூபாய் ரொக்கம், கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், பென் டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு, தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்தனர்.
இதனிடையே, அரசு மீது ஆதாரமின்றி ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி கோதண்டராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, மீண்டும் கோவை மத்திய சிறைக்கு சவுக்கு சங்கர் கொண்டு செல்லப்பட்டார்.
இதுதொடர்பாக பேட்டியளித்த அவரது தரப்பு வழக்கறிஞர் விஜயராகவன்,'யார் மனதும் புண்படும் விதமாக இனி கருத்து தெரிவிக்க மாட்டேன்' என சவுக்கு சங்கர் உறுதி அளித்துள்ளதாக கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“