யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சவுக்கு சங்கர் மீது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பதிவான வழக்குகளை கோவை சைபர் குற்றப்பிரிவுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது, யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்ந்து நீதிபதிகள், அரசியல்வாதிகளைத் தரக்குறைவாகப் பேசி வருகிறார் என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கரின் ஆன்லைன் நேர்காணல் தொடர்பாக அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-களை ஒன்றாக இணைக்க உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 24) அனுமதி அளித்தது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்ற முந்தைய உத்தரவுகளை சங்கர் பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கரின் ஆன்லைன் நேர்காணல் தொடர்பாக அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 16 எஃப்.ஐ.ஆர்-கள் தொடர்பான வழக்கை, உச்ச நீதிம்னற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
சவுக்கு சங்கரின் யூடியூப் நேர்காணல் தொடர்பான எஃப்.ஐ.ஆர்.களை ஒன்றாக இணைக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நவம்பர் 11, 2022-ல் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக விதிக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் ஜே.கே. மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், நவம்பர் 11, 2022-ல் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவைப் பின்பற்றவும் உத்தரவிட்டது. அடுத்த விசாரணை தேதி வரை, நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக சங்கர் எந்த வீடியோக்களையும் அல்லது கருத்துகளையும் வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்காததற்காக சவுக்கு சங்கர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மீறியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“அவர் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று கூறப்பட்டது. ஆனால், அவர் திருத்த முடியாதவர். தன்னைத்தானே அடக்கிக் கொள்ள முடியாது.” என்று வாதிட்டார்.
அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “நீதிபதிகள் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அவர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீதும், காவல் துறை, பத்திரிகையாளர்கள் - அனைத்து வகையான மக்கள் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அவர் ஒரு பணிநீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டபிள்” என்றும் சவுக்கு சங்கரின் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு வலியுறுத்தினார்.
சவுக்கு சங்கர் தரப்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், “சவுக்கு சங்கர் தாம் கூறியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அவதூறாக பேசி விட்டு சங்கர் எத்தனை முறை மன்னிப்பு கேட்பார். அதனை ஏற்க முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிகாரிக்கரிக்கிறது. மேலும், சங்கர் மீதான அனைத்து வழக்குகளையும் பிரதான வழக்குடன் இணைத்து விசாரிக்க வேண்டும்.
அதாவது எப்.ஐ.ஆர் 123/2024 சைபர் கிரைம் கோவையில் 2024 மே 3-ம் தேதி பதிந்த வழக்குடன் அனைத்தும் இணைக்கப்பட வேண்டும். இதில் 15.05.2024 திருச்சியில் பதிவு செய்த வழக்கின் குற்றச்சாட்டு என்பதால், அந்த வழக்கை மட்டும் தனியாக விசாரிக்கலாம். மேலும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனைத்து வழக்குகளையும் விரிவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.
சங்கர் மீதான வழக்கு தொடர்பான ஆதாரங்கள், கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை கையாளவும் கோவை சைபர் கிரைம் காவல் நிலைய காவல் துறைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த வழக்குகள் பற்றிய கருத்துக்களை சங்கர் வெளியில் கண்டிப்பாக தெரிவிக்க கூடாது. மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற யூடியூபர் சங்கரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் முழுமையாக நிராகரிக்கிறது.
மேலும், ஏற்கனவே தடுப்பு காவல் வழக்கில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மனுதாரரான சங்கர் மீறினால், அதனை உடனடியாக இந்த நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு அரசு தரப்பு கொண்டு வந்து தெரிவிக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்பது உறுதியாகியுள்ளது.