ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்த திரைப்படங்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக, அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், தமிழக முதல்வர் ஸ்டாலின், அவருடைய மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி ஆகிய 3 பேர் மீதும், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழக முதல்வர் ஸ்டாலின், அவருடைய மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி ஆகிய 3 பேர் மீதும், லஞ்ச ஒழிப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கூட்டுச் சதி உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளேன்” என்று சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சவுக்கு சங்கர், “நான் 2 நாட்களுக்கு முன்னரே, என்னுடைய புகாரை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரிடம் மட்டுமே அளிப்பேன் என்று சொல்லி இன்று புகார் அளிக்க வந்தேன். முதலமைச்சர் ஸ்டாலின் மீது புகார் என்றதும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் என்னை சந்திக்க மறுத்துவிட்டார். டி.எஸ்.பி-யிடம் கொடுக்க சொன்னார்கள். அதன்படி, டி.எஸ்.பி ராமதாசிடம் என்னுடைய புகாரைக் கொடுத்துள்ளேன்.
என்னுடைய புகாரின் உள்ளடக்கம் என்னவென்றால், முதலமைச்சர் ஸ்டாலின் கீழ்தான் உள்துறை வருகிறது. அவருடைய மகன்தான் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் நடத்துகிறார்கள். ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஸ்டாலினுடைய பினாமி நிறுவனம் என்று நான் குற்றம்சாட்டுகிறேன். ஸ்டாலின் தன்னுடை பினாமி நிறுவனத்திற்காக சட்டத்தை வளைத்து அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை பல்வேறு சிறப்புக் காட்சிகள் திரையிடுவதற்கு அனுமதி அளித்ததன் மூலமாக தனது பினாமி நிறுவனத்திற்கு இது போன்ற சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி அளித்து அவருடைய மகனுக்கு பல கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதற்கு ஸ்டாலின் சிறப்புக் காட்சிக்கான உத்தரவை வழங்கியதன் மூலம் உத்தரவிட்டிருக்கிறார். இது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கூடிய குற்றம் என்பதால் இதன் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறேன். இவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்ப்பேன். இல்லையென்றால், நான் நீதிமன்றத்தை நாடுவேன்” என்று கூறினார்.
இங்கே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சவுக்கு சங்கர், “முதலமைச்சரே எப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பார்? அதனால்தான், நான் அடுத்ததாக ஆளுனரையும் சந்தித்து இந்த புகார் மனுவை அளிக்க இருக்கிறேன். லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது. மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை. அதற்கான முதல் கட்டமாகத்தான் நான் இந்த புகாரை அளித்திருக்கிறேன்.
தமிழக அரசு ஆளுநர் மாளிகையில் பணியாற்றக்கூடிய, அரசு அதிகாரிகளை வைத்து ஆளுனர் மாளிகையில் என்ன நடக்கிறது என்பதை உளவு பார்ப்பதாக ஆளுனருக்கு தகவல் வந்திருக்கிறது. ஆளுனர் வாக்குமூலம் பெற்றிருக்கிறார். உளவுத்துறையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி என்னை ஆளுனர் மாளிகையில் என்ன நடக்கிறது என்பதை உளவு பார்க்க சொல்லியுள்ளார் என்ற அடிப்படையில் ஆளுனர் இது தொடர்பான அறிக்கைகளோடும் சேர்த்து டெல்லிக்கு சென்றிருக்கிறார்.
ஆளுனருக்கு லஞ்சஒழிப்புத்துறை இயக்குனருக்கு வழக்குப்பதிவு செய்யுங்கள் என்று சொல்வதற்கு அதிகாரம் இருக்கிறது என்பதை ஸ்டாலினே ஒப்புக்கொண்டுள்ளார். அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஸ்டாலின் மீதும் உதயநிதி மீதும், பனீந்தர் ரெட்டி மீதும் வழக்குப் பதிவு செய்யுங்கள் என்று நான் ஆளுனரை சந்தித்து புகார் அளிக்க உள்ளேன்.” என்று சவுக்கு சங்கர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.