RS-Bharathi: தி.மு.க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை கீழமை நீதிமன்றங்கள் ரத்து செய்த நிலையில், அந்த வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இதுகுறித்து விமர்சனம் செய்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் , முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தானாக முன்வந்து வழக்க தொடர்ந்தார். அவரது இந்த துணிச்சலான முடிவைப் பாராட்ட வேண்டும். ஆனால். ஆர்.எஸ் பாரதி, ஆகஸ்ட் 24 அன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நீதிபதி தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பதில் 'தேர்வு செய்து செயல்படுவதாக கூறியுள்ளார்.
நீதிபதிக்கு தவறான நோக்கம் உள்ளது போல் பேசி உள்ளார். தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியின் இந்த கருத்து பொதுமக்களின் பார்வையில் நீதித்துறையின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தி உள்ளது. எனவே, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோரது அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் பி.விஜேந்திரன், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரினர். அப்போது நீதிபதிகள், பதிவாளரிடம் (நீதித்துறை) எழுத்துப்பூர்வ கோரிக்கையை அளிக்குமாறு உத்தரவிட்டார். உரிய ஆவணங்களுடன் எழுத்து பூர்வமாக வழக்கு தாக்கல் செய்தால், வழக்கு ஒரு வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் நீதிபதிகள் கூறினர்.
இந்நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சவுக்கு சங்கருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர அனுமதி கோரிய சவுக்கு சங்கரின் மனுவை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் நிராகரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“