க.சண்முகவடிவேல்
Savukku Shankar | Felix Gerald | Tamilnadu police: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீசில், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4 ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அளித்த புகார், பெண் காவலர்கள் அளித்த புகார் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.
புகார்
இந்நிலையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனல் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டது. பெண் காவலர்கள் குறித்து இழிவாக விவாதம் நடத்திய ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் மீது தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் சென்னை மாநகர காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதேபோல், திருச்சி லால்குடி டி.எஸ்.பி யாஸ்மின் என்பவர் திருச்சி எஸ்.பி-யிடம் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட வேண்டும் என்று புகார் மனுவின் அடிப்படையிலும் போலீசார் கைது நடவடிக்கைக்கு தீவிரம் காட்டினர். இந்த நிலையில், தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு முன்ஜாமீன் கேட்டு சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேசன் பாபு, பெண் காவலர்கள் குறித்து இழிவாக விவாதம் நடத்திய பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். யூடியூப் சேனல்கள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டு சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக நீதிபதி குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கில் அநாகரீகமாக விவாதம் செய்த ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என்றும் தனது கருத்தையும் பதிவு செய்தார்.
இந்த வழக்கில் மனுதாரருக்கு தற்போது இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்க முடியாது எனக் கூறி, காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஒரு வார காலம் ஒத்தி வைத்துள்ளார். ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர்.
கைது
இந்த நிலையில், டெல்லியில் இருந்த ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு இன்று அதிகாலை திருச்சி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து இன்று ரயில் மூலம் திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் நடத்தும் விசாரணைக்கு ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அழைத்து வரப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“