பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை போலீசார் மே 4-ல் கைது செய்தனர்.
சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது காரில் கஞ்சா இருந்ததாக அவர் மீதும், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு ஆகியோர் மீதும் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைதான சவுக்கு சங்கருக்கு ஜூன் 19 வரை காவல் நீட்டிப்பு செய்து மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சவுக்கு சங்கர் தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றதால், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி செங்கமலச்செல்வன் கடந்த 10 ஆம் தேதி விசாரித்து, ஜூன் 13-க்கு ஒத்திவைத்தார். இந்த நிலையில், சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீது இன்று வியாழக்கிழமை (ஜூன் 13) விசாரணை நடைபெற்றது. அப்போது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வழக்கை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
குண்டாஸ் வழக்கு நிலை என்ன?
போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் மே 12-ம் தேதி உத்தரவிட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி அவரது தாய் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு அளித்தனர். இதையடுத்து, அந்த வழக்கை விசாரித்த 3-வது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், காவல் துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை வேறொரு இரு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று போலீஸார் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், 'வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி, உரிய வரிசைப்படியே இந்த வழக்கு விசாரிக்கப்படும். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்த பிறகே, இந்த மனு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என்று தெரிவித்தனர்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், 'சவுக்கு சங்கருக்கு மருத்துவ சிகிச்சைதேவைப்படுவதாலும், பிற காரணங்களுக்காகவும் இடைக்கால நிவாரணமாக அவரை தற்காலிகமாக விடுவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். அதற்கு அரசு தரப்பு, 'தற்போதைய சூழலில் அவரை விடுவிக்க இயலாது' என்று வாதிட்டார்.
இதையடுத்து, மனுதாரர் மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால நிவாரணம் கோரி அரசிடம் மனு அளிக்கலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், அந்த மனுவை தமிழக அரசு 8 வாரங்களில் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“