பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்த கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கடந்த மே 4-ம் தேதி தேனி மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர்.
அதன் பின் அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12 அன்று சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது சி.எம்.டி.ஏ அதிகாரி அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, அந்த வழக்கிலும் சிறையில் அடைத்தனர். அதன்பின், அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பாக, சென்னையில் உள்ள அறிவுரைக் கழகம் விசாரணை நடத்தி, அவர் மீதான குண்டர் சட்டத்தை உறுதிப்படுத்தி உள்ளது.
சவுக்கு சங்கரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதால், குண்டர் சட்டத்தில் அடைக்க முடிவு செய்யப்பட்டது என்றும், இது, காவல் துறையின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“