Advertisment

சவுக்கு சங்கர் குண்டர் சட்ட வழக்கு: ஐகோர்ட் நீதிபதிகள் மாறுபட்ட கருத்து

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

author-image
WebDesk
New Update
madras high court reserves order on savukku shankar preventive detention Tamil News

சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என இரு நீதிபதிகளும் ஒருமித்த ஆணையை பிறப்பித்தனர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் (Savukku Shankar), ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீசில், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார். 

Advertisment

இதனையடுத்து, சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கடந்த 4 ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கோவை, சேலம், சென்னை, திருச்சி சைபர் க்ரைம் போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மொத்தமாக சவுக்கு சங்கர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சவுக்கு சங்கருக்கு எதிராக திருச்சியில் நடந்து வரும் வழக்கில் அவருக்கு மே 28 வரையில் நீதிமன்ற காவல் விதித்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தேனியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த விடுதி மற்றும் அவரது காரை சோதனை செய்ததில் 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம் மற்றும் கார் ஓட்டுநர் ராம் பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

மேலும், மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். 2 நாட்கள் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டு, நேற்றுடன் விசாரணை முடிவடைந்த நிலையில், தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திலிருந்து போலீசார் பாதுகாப்புடன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனு நேற்று வியாழக்கிழமை மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரினார். இதனையடுத்து, இந்த மனுவை மே 27 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.  

சவுக்கு சங்கர் தாயார் மனு  

இந்நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Madras High Court) கடந்த புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.  

பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நிலையில், அதனை ரத்து செய்து, தனது மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்து தனது மகனை ஒவ்வொரு ஊராக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வருவதாகவும், காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மகனுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை என்றும், சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல் தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகிய அடங்கிய அமர்வுக்கு முன் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் இன்று பிற்பகல் 2:15 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர காவல் ஆணையர்  தரப்பு உத்தரவிட்டுள்ளனர். மேலும், வழக்கின் விசாரணை பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வீர்கள்? என்னவெல்லாம் செய்ய மாட்டீர்கள் என்று உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டனர்.

மேலும் தமிழக முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளதாக கூறிய நீதிபதிகள், அதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் இதுசம்பந்தமாக அவரை இன்று மாலையே சந்தித்து உத்தரவாதம் பெற்று பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என, சவுக்கு சங்கர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும்படி அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையையும் இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.

மாறுபட்ட தீர்ப்பு 

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. அப்போது, தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்வதற்கு முன் இறுதி விசாரணை நடத்தலாமா? என்ற விஷயத்தில் நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்து நிலவியது. தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்வதற்கு முன் வழக்கை இறுதி விசாரணைக்கு எடுக்க அவசியம் இல்லை என்று நீதிபதி பாலாஜியும், தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்யாவிட்டாலும் இன்றே இறுதி விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி சுவாமிநாதனும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த மனு மீதான உத்தரவை பிற்பகலுக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்பின்னர் நடந்த விசாரணையில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். 

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். அதேநேரத்தில், சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு அனுமதியளித்த பின், ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3ஆவது நீதிபதி விசாரணைக்கு பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

இருப்பினும், சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என இரு நீதிபதிகளும் ஒருமித்த ஆணையை பிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

இதற்கிடையில், கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் தொடர்பான ஆவணங்களை பொய்யாக புனைந்து பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது புகார் சி.எம்.டி.ஏ. சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில், இன்று மாலை 6 மணி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2 நாள் காவலில் எடுக்க அனுமதி கோரியிருந்த நிலையில் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Madras High Court Savukku Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment