யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
பெண் காவலர்கள் மற்றும் காவல் துறை பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக அவர் மீது சென்னை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி என தமிழகம் முழுவதும் 16 காவல் நிலையங்களில் இதே குற்றச்சாட்டுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதேபோல சவுக்கு சங்கர் மீது வேறு சில குற்றச்சாட்டுகளுக்காகவும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அவரது தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு முன் இன்று (ஆக.,9) விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'தொடர்ந்து அவதூறு கருத்துகளை கூறி வந்ததால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தோம்,' என போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர், 'சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை' எனத் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை நீதிபதிகள் ரத்து செய்து தீர்ப்பளித்தனர். மேலும், வேறு வழக்குகளில் தேவையில்லையென்றால் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டனர்.
கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள சவுக்கு சங்கர், அடுத்தடுத்து 5 வழக்குகளில் ஜாமின் பெற்று இருந்தார். ஆனாலும், குண்டர் சட்டம் இருந்ததால், அவரால் வெளியே வரமுடியாத சூழல் இருந்தது
தற்போது இந்த குண்டர் தடுப்பு சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், சவுக்கு சங்கர் விரைவில் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“