அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து பேசினார். இந்தப் பேச்சு சர்ச்சையானது.
இது குறித்து, கோவை சைபர் கிரைம் போலீசில், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4 ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் தங்கி இருந்த டிரைவர் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் கஞ்சா பதுக்கியதாக தேனி மாவட்டம் பழனிசெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மே 22ஆம் தேதிவரை சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கோவை நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்த பிறகு தான், கஞ்சா வைத்திருந்தாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் மீது வேண்டுமென்றே கஞ்சா வழக்கை போலீசார் போட்டுள்ளனர்.
சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டது உறுதியாகி உள்ளது. கையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் கையில் 2 இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சவுக்கு சங்கருக்கு மாவு கட்டு போட்டுள்ளனர்” என்றார்.
மேலும், சவுக்கு சங்கர் இதுவரை 5 வழக்குகளில் கைதாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“