Savukku Shankar: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீசில், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4 ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் வேண்டி கடந்த வாரம் சவுக்கு தரப்பு வழக்கறிஞர் மனு அளித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சரவண பாபு வழக்கின் விசாரணையை 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
சோதனை
இதற்கிடையில், காரில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரவாயலில் உள்ள வீடு, தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் தேனி போலீசார் சோதனை செய்து வருகின்றனர். கஞ்சா சப்ளை நடந்திருப்பதாக வந்த தகவலையடுத்து சவுக்கு சங்கரின் மதுரவாயல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் தி-நகர் சவுக்கு மீடியா அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிஷங்கர் மற்றும் தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி ஆகியோர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோவையில் இருந்து சென்னைக்கு அவரை காவல்துறையினர் அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“