Advertisment

போலீஸ் கஸ்டடியில் சவுக்கு சங்கர்: உடல்ரீதியாக எந்தவித காயமும் ஏற்படுத்தக் கூடாது- நீதிபதி

அவரை கோவையில் இருந்து அழைத்து வரும் பொழுது தாக்கப்பட்டதாக குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கை இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை

author-image
WebDesk
New Update
savukku shankar

Savukku Shankar case

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்களை அவதூறு பரப்பும் வகையில் நேர்காணல் கொடுத்த சவுக்கு சங்கரை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனியில் வைத்து கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

இதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் சவுக்கு சங்கர் கோவை சிறையில் இருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் இரு தரப்பினர் வாதத்தை கேட்டறிந்த நீதிபதி ஜெயபிரதா வழக்கை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நேற்று காலை லால்குடி சிறையில் இருந்த சவுக்கு சங்கரை காவல் துறையினர் பாதுகாப்புடன் திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

ஒரே இடத்தில் பேசுவதற்காக பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்வது எப்படி என சவுக்கு சங்கர் தரப்பில் கேட்கப்பட்ட பொழுது, அரசு தரப்பு வழக்கறிஞர், உதயநிதி சனாதானத்தை குறித்து பேசியபோது அவர் மேல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஒரே வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தியது எடுத்துக் கூறினர். இதனைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சவுக்கு சங்கரை விசாரிப்பதற்காக ஏழு நாட்கள் கஸ்டடி கோரினர்.

அரசு தரப்பு வழக்கறிஞர் ஹேமந்த் தெரிவிக்கையில்; சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனலில் பெண் காவலர்களையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவால் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்தில் இருக்க கூடிய பெண்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் பெண்களை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துகளை தெரிவித்தது சட்டப்படி குற்றம், என்றார்.

மேலும், சவுக்குசங்கருக்கு எதிர்தரப்பின போலீஸ் கஸ்டடி வழங்கக்கூடாது என்று தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு அவருக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் அந்த வழக்கில் சில உண்மைகளை கண்டறிவதற்காக அவர் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்டார்.

அது போலவே இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக யார்யார் செயல்படுகிறார்கள், இவர் இதுபோன்று தவறான கருத்துக்களை வெளியிடுவதற்கு பின்புலமாக யார் இருக்கிறார்கள், எதற்காக அவதூறுகளை பரப்ப வேண்டும், என்ற கோணங்களில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

அதே சமயம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் யூடியூப் சேனல் உரிமையாளரும், ஆசிரியருமான பெலிக்ஸ் ஜெரால்ட் அவரின் வீடு மற்றும் அலுவலகத்தை சோதனை செய்ததில் சில முக்கிய ஆவணங்களும், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள போலீஸ் கஸ்டடி வழங்க வேண்டும் என நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கென்னடி விவாதிக்கையில்;  தனியார் யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை இனிமேல் அழிக்க முடியாது. அதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

பின்பு கோவை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்து அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கியுள்ளது. அதேசமயம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் யூடியூப் சேனல் உரிமையாளரும், ஆசிரியரும் பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை செய்து சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் இந்த வழக்கில் எதற்காக போலீஸ் கஸ்டடி வழங்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேர் சவுக்கு சங்கர் மீது புகார் தெரிவித்து இருந்தால், ஒரு லட்சம் முறை நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா? ஆகையால் தமிழ்நாடு முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள புகார்களை ஒரே வழக்காக எடுத்துக்கொண்டு தவறுகள் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். ஆகையால் சவுக்கு சங்கருக்கு போலீஸ் கஸ்டடி வழங்கக்கூடாது.

ஏற்கனவே சவுக்கு சங்கரின் உடல்நிலை சரியில்லை,கை உடைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று வாகனத்தில் வரும்போதே அவர் பெண் காவலர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதையும் தாண்டி போலீஸ் கஸ்டடிக்கு அனுமதித்தால் சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் கஸ்டடி வழங்கக்கூடாது என நீதிபதியிடம் முறையிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜெயபிரதா; யூடியூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க  அனுமதி அளித்தார். 7 நாள் காவல் கஸ்டடி கேட்டிருந்த நிலையில் , ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும். அதே சமயம் இன்று மாலை 4 மணிக்கு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்ற நடுவர் ஜெயபிரதா உத்தரவு பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் பலத்த பாதுகாப்புடன் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

பின்னர், சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் முல்லைசுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாவட்ட காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் கோடிலிங்கம் 7 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தது. கோவையில் இருந்து திருச்சி வரும் பொழுது தாக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அதற்கான உண்மை தன்மை அறியும் வரை போலீஸ் காவலில் வழங்கக் கூடாது எனவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்று சவுக்கு சங்கர் எங்களிடம் தெரிவித்ததின் பேரில் நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம்.

தொடர்ந்து நீதிபதி அவர்கள் இருதரப்பு வாதங்களை கேட்டு அறிந்து ஒரு நாள் போலீஸ்காவலில் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அவரை மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ அல்லது எந்த வித காயமும் ஏற்படுத்தக் கூடாது எனவும், தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுக்க வேண்டும். இப்போது என்ன நிலையில் அழைத்து செல்லப்படுகிறாரோ அதே நிலையில் திருச்சி அரசு மனு மருத்துவமனையில் பரிசோதனை செய்து அவரது உடல் நலம் குறித்து அறிக்கை பெற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 24 மணி நேரத்திற்குள் வழக்கறிஞர்கள் 3 முறை அவரை சென்று பார்வையிடலாம் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 அவரை கோவையில் இருந்து அழைத்து வரும் பொழுது தாக்கப்பட்டதாக குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கை இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை, அது கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment