க.சண்முகவடிவேல்
Savukku Shankar | Felix Gerald: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு கைது செய்தனர்.
தேனியில் கைது செய்யப்பட்ட அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. கடைசியாக அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியது தொடர்பாக முசிறி டி.எஸ்.பி. யாஸ்மின் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் ஃபிக்ஸ் சேனலை சேர்ந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, டெல்லியில் ஃபெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்து ரயில் மூலம் அழைத்து வந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதன் பின்னர் சவுக்கு சங்கரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் மனு தாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கரை பெண் போலீசார் நேற்று முன்தினம் திருச்சி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி பின்னர் லால்குடி கிளை சிறையில் அடைத்தனர். இதன்பின்னர், நேற்று வியாழக்கிழமை காலை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது சவுக்கு சங்கரின் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ஏற்கனவே இந்த வழக்கில் கோவை போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். ஆகவே, போலீஸ் காவலுக்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா, சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
அதைத் தொடர்ந்து அவரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கே விடிய விடிய போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதற்கு பின்னணியில் யார் யார்? கேட்டனர்.
அதற்கு சவுக்கு சங்கர் பதிலளிக்கும் போது, "யாரும் என்னை தூண்டவில்லை ஆளுங்கட்சியை விமர்சிப்பது தான் ஜார்னலிசம். எடப்பாடி பழனிச்சாமி ஆளுங்கட்சியாக இருந்தபோது அவரை விமர்சனம் செய்துள்ளேன். பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். அது தப்புதான். அதை இப்போது உணர்ந்துள்ளேன்" என அவர் கூறியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஒருநாள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்புஆஜர் படுத்தப்பட்டார். திருச்சி நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட அவருக்கு மே 28 வரையில் நீதிமன்ற காவல் விதித்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.
இதனையடுத்து, தற்போது திருச்சியில் இருந்து அவர் ஏற்கனவே இருந்த கோவை மத்திய சிறைக்கு சவுக்கு சங்கர் தற்போது கொண்டு செல்லப்படுகிறார்.
இதே வழக்கில் கைதாகியுள்ள ஃபெலிக்ஸிற்கு இன்று காலை கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ், இந்த வழக்கு தொடர்பாக வரும் மே 31 ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர் தரப்பு, “எனக்கு கோவை சிறை வேண்டாம். அங்கு இருந்தால் எனக்கு உளவியல் ரீதியாக மன அழுத்தம் ஏற்படுகிறது. சென்னை அல்லது திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டும். சிறையில் எனக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் நான் துன்புறுத்தப்படவில்லை. மேலும் கோவை சிறையில் உளவியல் ரீதியாக பிரச்னை உள்ளது எனக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. எனக்கு மருத்துவ உதவியும், அனைவருக்கும் இருக்கக்கூடிய சிறை போலவே வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
திருச்சி நீதிமன்றத்தில் கடந்த 15-ம் தேதி சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பாதுகாப்பு பணிக்குச் சென்ற திருவெறும்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமியை சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியதாக, திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
அதன் பேரில் சவுக்கு சங்கர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் திருச்சியில் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து சவுக்கு சங்கர் மீது மொத்தம் 9 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.