தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை தவறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த தனியார் யூடியூப் பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதனை அடுத்து 10-ம் தேதி இரவு டெல்லியில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரை ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அவர் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவு படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில், நேரடியாக தேர்வு செய்யப்பட்டு தற்போது முசிறி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் M.A. யாஸ்மின், இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், மேற்படி காணொளியானது சமூதாயத்தில் பல்வேறு துறைகளில், குறிப்பாக காவல் துறையில் பாலின சமத்துவ வேறுபாடின்றி சீரிய முறையில் பணிபுரிந்து வரும் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாவட்டம் சைபர் கிரைம் . 21/24 U/s 294(b), 353, 509 IPC, 67 IT act and 4 of TN prohibition of harassment of women act பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருச்சிராப்பள்ளி மாவட்ட கணினிசார் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் தலைமையிலான காவல்துறையினர் நீதிமன்றம் உத்தரவு பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை சம்பிரதாய கைது (Formal arrest) செய்துள்ளனர். மேலும் திருச்சி மாவட்ட கணினி சாா் குற்றப்பிரிவு காவல் நிலைய குற்ற எண். 21/24 இல் எதிரி-1 சவுக்கு சங்கரை கோயம்புத்தூர் சிறையில் இருந்து, போலீஸ் வேனில் அழைத்து வரும் பெண் காவலர்கள் இன்று (15.05.2024) நண்பகல் அளவில் திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன் திருச்சி மாவட்ட காவல்துறையினர் ஆஜா்படுத்தினர். அப்போது பெண் காவலர்கள் குறித்து இழிவான வகையில் கருத்து தெரிவித்ததற்காக வாகனம் முழுவதும் பெண் காவலர்கள் மட்டும் அடங்கிய பாதுகாப்பு குழுவோடு சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், கோவையில் இருந்து வரும் வழியில் பெண் போலீசார் என்னை கடுமையாக தாக்கினர். கண்ணாடியை கழற்ற சொல்லி துஷ்பிரயோகம் செய்தனர். என்னை அடிக்கும் போது அதை வீடியோ எடுத்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர்கள் அனுப்பினர். பெண் போலீசார் தாக்குவது எனக்கு வலிக்கிறது என நீதிபதியிடம் சவுக்கு சங்கர் கதறினார். இதனை அடுத்து நீதிபதி ஜெயப்பிரதா சவுக்கு சங்கரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்றார். இதனால் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து சவுக்கு சங்கர் மீண்டும் திருச்சி நீதிமன்றத்தில் 4 மணிக்கு மேல் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில் திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோர்ட்டிற்கு படையெடுத்ததால் நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவுகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.