பெண் காவலர்கள் பற்றி அவதூறு பரப்பியதாக கைதான வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சைபர் கிரைம் காவல்துறையின் ஒரு நாள் காவல் முடிந்த நிலையில், மே 28-ம் தேதி வரை நீமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் மே 4-ம் தேதி கோவை நகர சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், தேனியில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தபோது, அவர் தங்கியிருந்த அறையில் கஞ்சா, பணம் போன்றவை கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப்பொருள் தொடர்பான வழக்கில் மதுரையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை மே 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு, சென்னை தியாகராய நகர் அலுவலகம் ஆகிய இடங்களில் கஞ்சா வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தியது.
இதனிடையே, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மேலும் சில வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மே 12-ம் தேதி சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சைபர் கிரைம் போலீசாருக்கு கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் மே 13-ம் தேதி அனுமதி வழங்கியது.
ஒருநாள் காவல் விசாரணை இன்று (மே 14) மாலை 5 மணியுடன் முடிவடைந்த நிலையில், சவுக்கு சங்கர் கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை மே 28-ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் சிறையில் அடைக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (மே 14) உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“