பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த மே மாதம் 4 ஆம் தேதி கைது செய்தனர். அவர் மீது வேறு சில குற்றச்சாட்டுகளுக்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனிடையே, தேனி மாவட்டம் பி.சி பட்டி காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா வைத்து இருந்ததாகவும், அவர் மீது மேலும் சில வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக தேனி காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் தாயார், உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் மீதான குண்டர் சட்டத்தை திரும்பப்பெறுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதையடுத்து, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், அவர் மீது வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லையென்றால் உடனடியாக விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, மதுரை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மதுரை சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "முதலமைச்சர் விமர்சனங்களை எதிர்கொள்ளாதவர், நான் உண்மையை பேச அஞ்சாதவன் என்பதால் நான் வைத்த விமர்சனங்களுக்கு என்னை கைது அவசர அவசரமாக கைது செய்தார்கள்.
எனக்கு 3 இடங்களில் எலும்புகள் உடைதன. கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் காவல்துறையினர் என்னை கஸ்டடி எடுக்கும்போதும் தி.மு.க அரசிற்கு எதிராக எதுவும் பேசக்கூடாது. தி.மு.க அரசுக்கு ஆதரவாக பேச வேண்டும் நிபந்தனையாக கூறினார்கள். இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் உடனடியாக உங்களை விடுவிப்போம். அதை மீறினால் நாங்கள் உங்களை சிறையிலிருந்து விடமாட்டோம் என கடுமையாக நெருக்கடி கொடுத்தார்கள்.
நான் உண்மைகளை பேசுவதற்கு அஞ்ச மாட்டேன் என பதில் அளித்தேன். அதன் காரணமாக இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் என்னை கைது செய்தார்கள். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் அல்ல. விமர்சனங்களை பார்த்து பழகியவரோ வளர்ந்தவரோ அல்ல. தந்தையின் நிழலில் வளர்ந்த ஒரு போன்சாய் செடி தான் மு.க ஸ்டாலின்.
பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் இறந்தால் கருணையின் அடிப்படையில் பதவி வழங்குவார்கள், அது போலத்தான் தி.மு.க தலைவரும், தற்போது முதல்வராகவும் மு.க. ஸ்டாலின் வந்திருக்கிறார். உண்மையை சவுக்கு மீடியா 8 மாதங்களாக வெளிகொண்டு வந்ததன் காரணமாகத் தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு, அலுவலகம் சீலிடப்பட்டது. வீடுகளும் சீலிடப்பட்டுள்ளது. எனது தாயாரின் பென்ஷனும் முடக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடக்கும் எந்தவித உண்மையும் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக முதல்வரும், உதயநிதி ஸ்டாலினும் மிக கவனமாக இருக்கிறார்கள்.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் விவகாரம் அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளது. கடந்த 2023 டிசம்பரில் தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால், 'தமிழகத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் சர்வ சாதாரணமாக கடத்தப்படுகிறது. அதை தடுக்க வேண்டும், அதை தடுக்கவில்லை என்றால் மரக்காணத்தில் ஏற்பட்டதை போன்று மீண்டும் நடைபெறும்; என தமிழக உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
இந்த கடிதத்தின் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 66 உயிர்கள் போயிருக்காது. இதுபோன்ற உண்மைகள் மக்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக சவுக்கு மீடியா முடக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு முன்பாக தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் பாஸ்போர்ட் வழக்கு குறித்து பத்திரிகையாளர் எழுதியதற்கு அவரை கைது செய்துள்ளனர். சவுக்கு மீடியாவில் பணியாற்றிய நபர்கள் மீது கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படும் என மிரட்டி இருக்கிறார்கள். இது தனிநபருக்கு நடந்த கொடுமையாக பார்க்க கூடாது ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்ட கொடுமையாக தான் பார்க்க வேண்டும்.
ஐந்து மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளி வந்திருக்கிறேன். எனது அலுவலகம் முடக்கப்பட்டு இருக்கிறது. ஹார்டு டிஸ்க்கள் மற்றும் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் நம்பி இருந்தோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இருந்த வீரியத்தை போன்று மீண்டும் செயல்படுவேன். மக்களுக்கு எடுத்துரைக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் சவுக்கு மீடியா தயங்காது. எனது கையை கோவை சிறையில் வைத்து உடைத்தார்கள்.
தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது துளியும் இல்லை. தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தன்னை பத்திரிக்கையாளர் என கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டவர். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் பத்திரிக்கையாளர் சுதந்திரத்தையும் குரல் வளையையும் நெருக்குவது நிறுத்துவதில் முன்னணியில் இருக்கிறார். தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் இல்லாமல் ஒரு அவல நிலை உள்ளது. தமிழகத்தை பிடித்துள்ள திராவிட மாடல் என்ற சாவக்கேடு, எப்போது முடியும் என மக்கள் காத்திருக்கிறார்கள்" என்று அவர் ஆவேசமாக பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“